செய்திகள்

மூன்று நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் சென்றார் பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீத்தாராமன்

Published On 2018-10-10 21:30 GMT   |   Update On 2018-10-10 21:30 GMT
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீத்தாராமன் மூன்று நாள் அரசுமுறை பயணமாக நேற்று பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். #RafaleDeal #NirmalaSitharaman
புதுடெல்லி :

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, தேச பாதுகாப்புக்காக இந்திய விமான படைக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு வாங்குவது என முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, 2014-ல் பா.ஜ.க.வின் மோடி அரசு பொறுப்பேற்றதும் சில விதிகளை மீறி பிரான்ஸ் அரசுடன் ஒரு விமானத்தின் விலையை ரூ.1,670 கோடி என நிர்ணயித்து ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், பா.ஜனதா அதனை மறுக்கிறது.

எனினும், மத்திய அரசின் தலையீட்டினால் தான் ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது என சமீபத்தில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் இந்த விவகாரம் குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவித்தார். இது இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.

இந்நிலையில், மூன்றுநாள் அரசு முறைப்பயணமாக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீத்தாராமன் பிரான்ஸ் புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ஃப்ளோரன்ஸ் பார்லியை சந்தித்து பரபஸ்பரம் இரு தரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி அலோசிக்க உள்ளார்.

மேலும், 2015-ம் ஆண்டு 36 ரபேல் போர்விமானங்கள் வாங்குவதற்காக பிரதமர் மோடி கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் அந்நாட்டு அரசுடன் நிர்மலா சீத்தாராமன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என பாதுகாப்புத்துறை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

ரபேல் போர் விமான விவகாரத்தில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடந்த சில வாரங்களாக அறிக்கை போர் நடந்து வரும் சூழ்நி்லையில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியின் பிரான்ஸ் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. #RafaleDeal #NirmalaSitharaman
Tags:    

Similar News