செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை இழப்பீடு வழங்க கோரி மனு: பதில் அளிக்க தமிழக அரசுக்கு மேலும் 4 வாரம் அவகாசம்

Published On 2018-08-23 21:47 GMT   |   Update On 2018-08-23 21:47 GMT
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இரு தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியதால், மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #ThoothukudiSterlite #SupremeCourt
புதுடெல்லி:

ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை தொடர்பாக ராமசுப்பு என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு ஒன்றை முன்பு தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் அதை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டதாகவும், ஆனால் வழக்கை முறையாக விசாரிக்காமல், ஆலை இயங்க அனுமதி அளித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியதாகவும், அந்த தீர்ப்பை தள்ளுபடி செய்து ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.



மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு கடந்த மே மாதம் 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தனர்.

இந்தநிலையில், இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பதிவாளர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியதால், மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  #ThoothukudiSterlite #SupremeCourt #Tamilnews 
Tags:    

Similar News