செய்திகள்

பீகார் பாலியல் வன்கொடுமை விவகாரம்- மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Published On 2018-08-06 10:34 GMT   |   Update On 2018-08-06 10:34 GMT
பீகாரில் பாதுகாப்பு இல்லத்தில் நடந்த பாலியல் வன்முறை தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரச்சனை எழுப்பி வெளிநடப்பு செய்தனர். #LSWalkout #BiharShelterHomeIncident
புதுடெல்லி:

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக மக்களவையில் இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரச்சினை எழுப்பினர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பீகார்  மாநில காங்கிரஸ் உறுப்பினர் ரஞ்சீத் ரஞ்சன், ராஷ்டிரிய ஜனதா தளம் உறுப்பினர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் யாதவ், சவுகதா ராய் (திரிணாமுல் காங்.) உள்ளிட்ட எம்.பி.க்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து முழக்கமிட்டனர். 

பீகார் பாலியல் வன்கொடுமை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள போதிலும், அனைத்து ஆதாரங்களும் அழிக்கப்பட்டபிறகு, எப்படி நீதி கிடைக்கும்? என ரஞ்சீத் ரஞ்சன் கேள்வி எழுப்பினார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், அவர்களில் முக்கியமான ஒரு சிறுமியை காணவில்லை என்றும் ரஞ்சீத் ரஞ்சன் குற்றம்சாட்டினார். 

உறுப்பினர்களின் தொடர் அமளியால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. அவர்களை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சமாதானம் செய்தார். எனினும், இந்த சமாதானத்தை ஏற்காத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். #LSWalkout #BiharShelterHomeIncident
Tags:    

Similar News