செய்திகள்

சிறையில் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சமா? - லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகழேந்தி ஆஜர்

Published On 2018-07-02 07:33 GMT   |   Update On 2018-07-02 07:33 GMT
பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பான விசாரணைக்கு புகழேந்தி இன்று ஆஜர் ஆனார். #Sasikala #Pugazhendhi

பெங்களூர்

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிறையில் வசதிகள் செய்துகொடுக்க சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. உள்பட அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டி இருந்தார்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணை நடத்திய குழுவினர் அறிக்கையினை உள்துறை மந்திரியிடம் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் சசிகலாவுக்கு சிறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மைதான் என்றும், இதற்காக ரூ.2கோடி லஞ்சம் வழங்கப்பட்டதா என்று தனக்கு தெரியாது என்று கூறி இருந்தார்.

ரூ.2 கோடி லஞ்சம் விவகாரம் குறித்து கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இவர்கள் ஏற்கனவே முன்னாள் ஜெயில் டி.ஐ.ஜி.யும், தற்போது ஊர்காவல் படை ஐ.ஜி.யுமான ரூபாவிடம் விசாரணை நடத்தினர். சிறை சூப்பிரண்டுகள் உள்ளிட்ட அதிகாரிகளையும் அழைத்து விசாரணை நடத்தினர். தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகரான பெங்களூரு புகழேந்தியை விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஊழல் தடுப்புப்படை பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். கடந்த மாதம் 29-ந் தேதி நேரில் ஆஜராகி போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று அவர்கள் கூறி இருந்தனர். ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி புகழேந்தி அன்று ஆஜராகவில்லை.

இன்று (2-ந்தேதி) ஆஜராவதாக கூறி இருந்தார். அதன்படி இன்று பகல் 11.30 மணிக்கு அவர் பெங்களூருவில் உள்ள லஞ்ச ஒழிப்புபடை தலைமை அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Sasikala #Pugazhendhi

Tags:    

Similar News