செய்திகள்

கேரளாவில் துயரம்- கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

Published On 2018-06-14 23:31 GMT   |   Update On 2018-06-15 01:48 GMT
கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். #Keralarains
கோழிக்கோடு:

கேரள மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை கொட்டி தீர்க்கிறது.

தொடர் மழையால் கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரி உள்ளிட்ட சில பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலைச்சரிவில் இருந்த பல வீடுகள் மற்றும் வயலில் பயிரிடப்பட்ட பயிர்கள் அடித்துச்செல்லப்பட்டன. பல இடங்களில் வீடுகள் கடுமையாக சேதம் அடைந்தன.

நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் இறந்தனர். மேலும் 9 பேர் மாயமானார்கள். இதையடுத்து சிறப்பு தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்தது.

அதன்படி 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் நேற்று அதிகாலை அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மாயமான 9 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது பற்றி அறிந்த முதல்-மந்திரி பினராயி விஜயன் மீட்பு பணிகளை விரைந்து செய்யுமாறு மந்திரிகள், தலைமை செயலாளர், கலெக்டர்கள், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு அறிவுறுத்தினார். கனமழை காரணமாக கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

நிலச்சரிவால் கோழிக்கோடு-கொள்ளேகால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. பலத்த மழை, நிலச்சரிவால் வீடுகளை இழந்தவர்கள் தங்க நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.  #KeralaRain
Tags:    

Similar News