செய்திகள்

பால்கர் தொகுதி இடைத்தேர்தல் - தனியார் காரில் மின்னணு இயந்திரங்களை எடுத்து சென்ற அதிகாரி

Published On 2018-05-29 17:43 GMT   |   Update On 2018-05-29 17:43 GMT
மகாராஷ்டிராவில் பால்கர் மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கு பின் சில மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் விதிகளை மீறி தனியார் காரில் கொண்டு செல்லப்பட்டு உள்ளன.
பால்கர்:

மகாராஷ்டிராவின் பந்த்ரா-கோண்டியா மற்றும் பால்கர் என இரு நாடாளுமன்ற தொகுதிகள், உத்தர பிரதேசத்தின் கைரானா மற்றும் நாகலாந்தில் ஒரு தொகுதி என 4 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நேற்று நடந்து முடிந்தது.

இந்த இடைத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன என சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் டுவிட்டரில் குற்றச்சாட்டு எழுப்பினார்.  இதே தகவலை ராஷ்டீரிய லோக் தள கட்சியும் தெரிவித்திருந்தது.

தேர்தல் விதிமுறைகளின்படி வாக்கு பதிவு முடிந்தபின் மின்னணு இயந்திரங்கள் அரசு வாகனத்தில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

ஆனால் பால்கர் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் முடிந்த பின்னர் சில மின்னணு இயந்திரங்கள் தனியார் கார் ஒன்றில் விதிகளை மீறி எடுத்து செல்லப்பட்டு உள்ளன.

சில கிராமவாசிகள் காரை தடுத்து நிறுத்தி அதில் இருந்த தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பினர்.  பின் தகவல் அறிந்து வந்த போலீசார் காரில் இருந்தவர்கள் மற்றும் மின்னணு இயந்திரங்களை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனை அடுத்து பால்கர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரசாந்த் நார்னவாரே ஆகியோர், விதிகளை மீறிய தேர்தல் அதிகாரி மீது எப்.ஐ.ஆர். போடப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளனர்.  இதுபற்றி போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News