செய்திகள்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை 29-ந்தேதி தொடங்குகிறது

Published On 2018-05-19 04:49 GMT   |   Update On 2018-05-19 04:49 GMT
கேரளாவில் வருகிற 29-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதை வானிலை ஆய்வு மையம் கண்டறிந்ததுள்ளது. #Kerala #SouthWestMonsoon
திருவனந்தபுரம்:

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும்.

இந்த ஆண்டு மே மாத இறுதியிலேயே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அதன்படி, வருகிற 29-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதை வானிலை ஆய்வு மையம் கண்டறிந்தது. இத்தகவலை இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர்.

அந்தமான் கடல் பகுதியிலும் தென்கிழக்கு வங்கக்கடலிலும் மழைக்கான அறிகுறிகள் உருவாக தொடங்கி உள்ளது. 23-ந் தேதிக்கு பிறகு இது தெளிவாக தெரிய வரும். அதன் பிறகு 29-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

வானிலை மைய கணிப்புப்படி இது 4 நாட்கள் முன்னதாக அல்லது 4 நாட்களுக்கு பிறகு பெய்யத் தொடங்கும். இந்த அறிகுறிகள் மூலம் கேரளாவில் 3 நாட்கள் முன்னதாகவே தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது.


கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய பின்பு தமிழகம், ஒடிசா மாநிலங்களிலும் தென் மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கும். ஒடிசாவில் ஜூன் மாதம் 10-ந்தேதியும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் ஜூன் மாதம் 2-வது வாரத்திலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வால்பாறை, அவலாஞ்சி, பாஞ்சிடபால் பகுதிகளிலும் புலிகள் சரணாலய காடுகளிலும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை பெய்யுமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி வனப்பகுதியில் இப்போது காணப்படும் சீதோஷ்ணத்தால் இங்கு மழைக்கான அறிகுறி தென்படுவதாக நீலகிரி வனப்பகுதி ரேஞ்சரும் தெரிவித்தார். #Kerala #SouthWestMonsoon
Tags:    

Similar News