செய்திகள்

அதிக கட்டணம் கேட்கும் விடுதிகள் - நீட் தேர்வெழுத சென்ற மாணவர்கள் கேரளாவில் அவதி

Published On 2018-05-05 05:46 GMT   |   Update On 2018-05-05 05:46 GMT
‘நீட்’ தேர்வு எழுத இன்று அதிகாலையிலேயே எர்ணாகுளம் சென்றடைந்த தமிழக மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக கூறினர்.
திருவனந்தபுரம்:

‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பம் செய்திருந்த குமரி மாவட்டம் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கேரளாவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பெரும்பாலானவர்கள் ‘நீட்’ தேர்வு எழுத உள்ளனர். கேரளா வரும் தமிழக மாணவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலையிலேயே தமிழக மாணவ, மாணவிகள் எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை சென்றடைந்தனர். ஆனால் அங்கு அவர்கள் தவிக்கும் நிலையே ஏற்பட்டது. புதிய இடம், மலையாள மொழி தெரியாத நிலை, தேர்வு மையம் எங்கு உள்ளது என்பதை உடனடியாக தெரிந்துகொள்ள முடியாதது போன்ற சூழ்நிலைகள் அவர்களை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியது.

இதுதொடர்பாக மாணவ, மாணவிகள் கூறும்போது தங்களுக்கு யாரும் இதுவரை உதவாத சூழ்நிலையே உள்ளதாக குறிப்பிட்டனர். மேலும் இவர்கள் அந்த பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு சென்றபோது அங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது அவர்களது வேதனையை அதிகரிப்பதாக இருந்தது.

எர்ணாகுளம் கலெக்டர் முகமது சபிபுல்லா கவனத்திற்கு இதுபற்றி பலரும் கொண்டு சென்றனர். விடுதிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்து உள்ளார்.

எர்ணாகுளத்தில் ‘நீட்’ தேர்வுக்காக 58 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 30 ஆயிரம் பேர் ‘நீட்’ தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி முக்கிய ரெயில் நிலையங்களில் தமிழ் தெரிந்த தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஸ் வசதிக்கும் வழிகாட்டப்படுகிறது.

‘நீட்’ தேர்வு எழுத வருபவர்களிடம் தங்கும் விடுதிகளிலோ, உணவு விடுதிகளிலோ கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் கூறுகையில் கேரள மாநிலத்தில் உள்ள 58 மையங்களில் 33 ஆயிரத்து 160 பேர் ‘நீட்’ தேர்வு எழுதுகிறார்கள். அவர்களில் 5 ஆயிரம் பேர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றார்.

Tags:    

Similar News