செய்திகள்

கர்நாடக தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அழிவு ஆரம்பம்- நடிகர் பிரகாஷ் ராஜ்

Published On 2018-05-03 05:25 GMT   |   Update On 2018-05-03 05:25 GMT
கர்நாடக தேர்தல் முடிவுகள் பா.ஜனதாவுக்கு பெரும் தோல்வியாக அமையும் என்றும் பா.ஜனதாவின் அழிவு இங்கு இருந்துதான் ஆரம்பமாகும் என்றும் நடிகர் பிரகாஷ் ராஜ் கூறினார். #KarnatakaElection2018 #Modi #PrakashRaj
நகரி:

கர்நாடக மாநில தேர்தல் வருகிற 12-ந்தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கு காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

நடிகர் பிரகாஷ்ராஜ் பா.ஜனதாவை கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தல் குறித்து ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-

கர்நாடக மாநிலத்தில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட பிறகு, பாரதிய ஜனதாவின் செல்வாக்கு சரிந்து விட்டது. பா.ஜனதாவுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது.

2019 தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடிக்கு எந்த வேலையும் இருக்காது. அவர் ஓய்வு எடுக்க கர்நாடகத்துக்கு வந்தால் அவரை உட்கார வைத்து கன்னட மொழி கற்றுக்கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள்.

அதன் பிறகு கன்னட மொழியில் அவர் நன்றாக பிரசாரம் செய்யலாம். அவர் இங்கு பல கூட்டங்களில் கன்னட மொழியில் பேசியதை கேட்க முடியவில்லை.

நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல. உண்மையை சொல்ல எனக்கு எந்த பயமும் இல்லை. யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை.

கர்நாடக தேர்தலுக்கு பிறகு சுனாமி வரும் என்கிறார்கள். அந்த சுனாமியால் நாட்டுக்கு ஏதாவது நல்லது கிடைக்குமா? கிடைக்காது.


காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் போட்டி போட்டு பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். ராகுலுக்கு வயது என்ன? உங்களுக்கு வயது என்ன? என்பதை சிந்திக்க வேண்டாமா?

வருகிற 15-ந்தேதி வெளியாகும் கர்நாடக தேர்தல் முடிவுகள் பா.ஜனதாவுக்கு பெரும் தோல்வியாக அமையும். பா.ஜனதாவின் அழிவு இங்கு இருந்துதான் ஆரம்பமாகும். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடையும். ஆட்சிக்கு வர முடியாது.

இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். #KarnatakaElection2018 #Modi #PrakashRaj
Tags:    

Similar News