செய்திகள்

கர்நாடக தேர்தல் - மே முதல் தேதியில் இருந்து பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம்

Published On 2018-04-24 14:54 GMT   |   Update On 2018-04-24 14:54 GMT
கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பிரதமர் மோடி மே முதல் தேதியில் இருந்து மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து 20 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.#Karnatakaelection2018 #PMModi
புதுடெல்லி:

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் மே மாதம் 12-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அங்கு நடைபெற்றுவரும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள காங்கிரஸ் கட்சியும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற பா.ஜ.க. மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில் உள்ளது. கட்சியினரின் பிரசாரங்களும் களைகட்டியுள்ளது.

சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பு முடிவுகளின்படி, மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி 91 இடங்களிலும், பா.ஜ.க. 89 இடங்கள் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சிக்கு 40 இடங்களும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், பா.ஜ.க.வின் பிரசார பீரங்கியாக கருதப்படும் பிரதமர் நரேந்திர மோடி மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டால் காங்கிரசுக்கும் பா.ஜ.கவுக்கும் இடைவெளியை சமப்படுத்தி, அதற்கும் மேலாக சாதித்து ஆட்சியை கைப்பற்றி விடலாம் என பா.ஜ.க,வின் தேசிய தலைமை கருதுகின்றது.

இதையடுத்து, மாநிலத்தின் 20 இடங்களில் பிரதமர் மோடி பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் சூறாவளி பிரசாரச் சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அநேகமாக, வரும் மே முதல் தேதியில் இருந்து அவரது பிரசாரம் தொடங்கும். இந்த பயணத்தின்போது சுமார் 20 முக்கிய நகரங்களில் நடைபெறு பொதுக்கூட்டங்களில் மோடி பேசுவார் என டெல்லி பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #Karnatakaelection2018
Tags:    

Similar News