செய்திகள்

டீஸ்ட்டா செதல்வாட் கைதுக்கு எதிரான தடையை மே 31 வரை நீட்டித்தது சுப்ரீம் கோர்ட்

Published On 2018-04-09 14:23 GMT   |   Update On 2018-04-09 15:07 GMT
முறைகேடாக வெளிநாட்டு நிதி பெற்ற குற்றச்சாட்டில் சிக்கி, சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொண்டுவரும் டீஸ்டா செதல்வாட் தம்பதியரின் கைதுக்கு எதிரான உத்தரவு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாக கூறி அம்மாநிலத்தைச் சேர்ந்த சப்ராங் கம்யூனிகேஷன்ஸ் என்கிற அரசுசாரா தொண்டு நிறுவனம் வெளிநாட்டில் இருந்து சுமார் ஒன்றரை கோடி ரூபாய் நிதியுதவி பெற்றதாக கூறப்பட்டது.

இதுதொடர்பான தகவல்களை சேகரித்த மத்திய உள்துறை அமைச்சகம்,  அடுத்தகட்ட விசாரணையை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது.

இதையடுத்து, வெளிநாட்டு நிதி உதவி பெறுதல் சட்டத்தின் கீழ் சப்ராங் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, டீஸ்டா செதல்வாட், அவரது கணவர் ஜாவேத் அனந்த் ஆகியோரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்தது.

இந்நிலையில், மும்பையில் உள்ள டீஸ்டா செதல்வாட்டுக்கு சொந்தமான மும்பை அலுவலகம் மற்றும் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக செய்திகள் வெளியாகின.

இதற்கிடையில், இவ்வழக்கு தொடர்பாக தங்களை கைது செய்ய தடை விதிக்குமாறு மும்பை ஐகோர்ட்டில் டீஸ்டா செதல்வாட் தம்பதியர் மும்பை ஐகோர்டில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களை மே மாதம் 2-ம் தேதிவரை கைது செய்ய மும்பை ஐகோர்ட் கடந்த 5-ம் தேதி தடை விதித்து இருந்தது.

இந்த நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளை குஜராத் மாநில போலீசார் விசாரித்துவரும் நிலையில் டீஸ்டா செதல்வாட் தம்பதியருக்கு மும்பை ஐகோர்ட் முன்ஜாமின் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் குஜராத் மாநில அரசின் சார்பில் பிரபல மூத்த வழக்கறிஞர்கள் மகேஷ் ஜெத்மலானி, துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகினர். அவர்களின் வாதத்தை கேட்ட சுப்ரீம் கோர்ட், ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள மாநிலத்துக்கு உட்பட்ட நீதிமன்றத்துக்கு ஜாமின் வழங்கும் அதிகாரம் உள்ளதை சுட்டிக்காட்டியதுடன், டீஸ்டா செதல்வாட் தம்பதியரின் கைதுக்கு எதிராக மும்பை ஐகோர்ட் முன்னர் பிறப்பித்த கைதுக்கு எதிரான தடை உத்தரவை மே 31 வரை நீட்டித்தும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த காலக்கெடுவுக்குள் குஜராத் மாநிலத்தில் உள்ள நீதிமன்றத்தை நாடி ஜாமின் கோரவும் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. #TamilNews
Tags:    

Similar News