செய்திகள்

சட்டசபையில் பா.ஜனதா தூங்கிக் கொண்டு இருந்ததா? - அமித்ஷாவுக்கு சித்தராமையா கேள்வி

Published On 2018-04-02 03:57 GMT   |   Update On 2018-04-02 03:57 GMT
மத்திய அரசின் நிதியை வளர்ச்சி திட்டங்களுக்கு செலவு செய்தோம் என்று அமித்ஷாவுக்கு பதிலளித்த சித்தராமையா, சட்டசபையில் பா.ஜனதா தூங்கி கொண்டு இருந்ததா? என்று கேள்வி எழுப்பினார். #AmitShah #Siddaramaiah #KarnatakaElection2018
பெங்களூரு:

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கர்நாடகத்தில் பிரசாரம் செய்தபோது கர்நாடகத்திற்கு மத்திய அரசு ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 506 கோடி நிதி கொடுத்துள்ளது, அந்த நிதி எங்கே போனது? என்று கேள்வி எழுப்பினார். அந்த நிதி வளர்ச்சி திட்டங்களுக்கு செலவு செய்யப்பட்டுள்ளதாக சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்து உள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு கொடுத்த நிதி எங்கே போனது என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா கேட்டுள்ளார். அந்த நிதி பள்ளிகள் மேம்பாடு, நீர்ப்பாசன திட்டங்கள், மருத்துவமனைகள், சாலைகள் மேம்பாடு, ரெயில்வே திட்டங்கள், பயிர் காப்பீட்டு திட்டம், விவசாய கடன் தள்ளுபடி என்று பல்வேறு திட்டங்களுக்கு செலவிடப்பட்டு உள்ளன. மாநில அரசு செலவு செய்த ஒவ்வொரு ரூபாய்க்கும் சட்ட சபையில் கணக்கு தாக்கல் செய்யப்பட்டது.

கர்நாடகத்திற்கு மத்திய அரசு சிறப்பு நிதி உதவி எதையும் வழங்கவில்லை. தவறான தகவலை கூறி மக்களை முட்டாளாக்குவதை பா.ஜனதா நிறுத்த வேண்டும். மாநில அரசின் திட்டங்களுக்கான நிதி சட்டசபையில் விவாதித்த பிறகே ஒப்புதல் பெறப்பட்டது. அப்போது பா.ஜனதா தூங்கி கொண்டு இருந்ததா?. எங்கள் ஆட்சியில் 15 முறை சட்டசபை கூட்டம் நடைபெற்றது.

இந்த 15 முறையும் கேள்வி கேட்காமல் பா.ஜனதாவினர் தூங்கி கொண்டு இருந்தனரா?. மக்களை முட்டாளாக்கும் முயற்சியை பா.ஜனதாவினர் கைவிட வேண்டும். தொடர்ந்து பொய் சொன்னால் அது உண்மையாகிவிடாது. மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய திட்டங்களில் நிதி ஒதுக்கீட்டை குறைத்துவிட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #KarnatakaElection2018 #AmitShah  #Siddaramaiah
Tags:    

Similar News