செய்திகள்

புதிய நிதி ஆண்டு தொடக்கம் - மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் இன்று முதல் அமல்

Published On 2018-04-01 02:51 GMT   |   Update On 2018-04-01 02:51 GMT
புதிய நிதி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. #Budget2018 #Tamilnews
புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார். அப்போது அவர் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார்.

பங்குகள் விற்பனையில் மூலதன வருவாய் வரி வசூல், கல்வி வரி உயர்வு உள்ளிட்ட பல அம்சங்களை அறிவித்து இருந்தார். இன்று புதிய நிதி ஆண்டு தொடங்கி உள்ளதால் பட்ஜெட் அறிவிப்புகள் நடைமுறைக்கு வருகின்றன. அவற்றில் கீழ்க்கண்டவை குறிப்பிடத்தகுந்தவை ஆகும்.

* மாநிலங்களுக்கு இடையே ரூ.50 ஆயிரத்துக்கு அதிகம் மதிப்புள்ள சரக்குகளை எடுத்து செல்வதற்கு, இ-வே பில் என்னும் மின்னணு ரசீது நடைமுறை இன்று முதல் கட்டாயம் ஆகிறது.

இ-வே பில் போர்ட்டலில் (இணையதளம்) இருந்து பெறப்படுகிற இந்த ரசீது இன்றி சரக்குகளை ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு எடுத்துச்செல்ல முடியாது.

* ரூ.1 லட்சத்துக்கு அதிகம் மதிப்புள்ள பங்கு விற்பனையில் இருந்து 10 சதவீத மூலதன வருவாய் வரி கட்ட வேண்டும். பரஸ்பர நிதிக்கும் இது பொருந்தும்.

* வருமான வரி செலுத்துகிறவர்களுக்கான கல்வி வரி 3 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. எனவே இன்று முதல் வருமான வரி செலுத்துகிற அனைவரும் ஒரு சதவீதம் கூடுதல் வரி செலுத்த வேண்டும்.

* கம்பெனி வரி குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ.250 கோடிக்கு குறைவாக விற்று முதல் உள்ள கம்பெனிகளுக்கு கம்பெனி வரி 25 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. 99 சதவீத கம்பெனிகள் இந்தப் பிரிவில்தான் வருகின்றன. எனவே அவை வரி குறைப்பின் பலனை அடைய முடியும்.

* வருமான வரிசெலுத்துகிறவர்களுக்கு ரூ.40 ஆயிரம் நிரந்தர கழிவு முறையும் அமலுக்கு வருகிறது. அதே நேரத்தில் பயண அலவன்சு ரூ.19,200 கழிவு, மருத்துவ செலவு ரூ.15 ஆயிரம் கழிவு திரும்பப்பெறப்பட்டு விட்டது. #Budget2018 #Tamilnews
Tags:    

Similar News