செய்திகள்

திருப்பதி அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு

Published On 2018-03-25 02:36 GMT   |   Update On 2018-03-25 05:29 GMT
திருப்பதி அருகே தமிழக அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததோடு, 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

திருப்பதி: 

சேலம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 20 பயணிகளுடன் தமிழக அரசு விரைவு பஸ் திருப்பதி புறப்பட்டது. வேலூர் வழியாக திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் இன்று அதிகாலை 5 மணிக்கு சித்தூர் மாவட்டம் பூதலப்பட்டுநாயுடு பேட்டை அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த பாலத்தில் பஸ் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிகாலை நேரம் என்பதால பயணிகள் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். திடீரென ஏற்பட்ட விபத்தால் அவர்கள் அலறி கூச்சலிட்டனர்.

அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கி பஸ் டிரைவர் அருணாசலம், பெரம்பலூரை சேர்ந்த பயணி சுந்தர்ராஜ் (28) ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

மேலும் 15 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் கிரேன் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டது. விபத்து குறித்து சந்திரகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News