செய்திகள்

புதுவை நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது காங்கிரஸ்

Published On 2018-03-24 08:06 GMT   |   Update On 2018-03-24 08:06 GMT
புதுச்சேரியில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டது செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த சாமிநாதன், செல்வ கணபதி மற்றும் சங்கர் ஆகிய 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்து ஆளுநர் கிரண் பேடி பரிந்துரை செய்தார். அதனை ஏற்ற உள்துறை அமைச்சகம், மூன்று பேரையும் எம்.எல்.ஏ.க்களாக நியமித்து உத்தரவு பிறப்பித்தது. அவர்களுக்கு கடந்தாண்டு ஜூலை மாதம் கவர்னர் கிரண் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

ஆனால், அவர்கள் நியமனத்தை ஏற்க மறுத்த சபாநாயகர், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு மாத ஊதியம் அளிக்க தடை விதித்தார். இதையடுத்து, ஆளுநரின் இந்த நியமனத்துக்கு தடை விதிக்கக் கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. லெட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்குடன், ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவினை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு, சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கக் கோரி நியமன எம்.எல்.ஏ.-க்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு என 3 வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், புதுவை சட்டமன்றத்துக்கு மத்திய உள்துறை நேரடியாக நியமித்த 3 எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என சமீபத்தில் தீர்ப்பளித்தது. அரசியலமைப்புச் சட்ட அதிகாரத்தின் படியே 3 பேரின் நியமனம் நடைபெற்றுள்ளதாகவும், அவர்கள் பேரவைக்குள் செல்வதைத் தடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.



இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.  #tamilnews
Tags:    

Similar News