search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை நியமன எம்எல்ஏக்கள்"

    சட்டசபை நிகழ்வுகளில் பங்கேற்க பாரதிய ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுக வேண்டும் என சபாநாயகர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். #NominatedMLAs #Vaithilingam
    புதுச்சேரி:

    புதுவை காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகரில் உழவர்கரை நகராட்சி சார்பில் இன்று தூய்மை பணி நடந்தது. மழை காலங்களில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்கவும், சேதத்தை தடுக்கவும் வாய்க்கால்களில் அடைப்புகளை அகற்றும் பணி நடந்தது. இதை சபாநாயகர் வைத்திலிங்கம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியாவது:-

    சட்டப்பேரவைக்கு மத்திய அரசு நியமித்த பா.ஜனதாநியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்பதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது.

    எனவே, அவர்கள் 3 பேரும் உச்சநீதிமன்றத்தை அனுகி சபை நிகழ்வுகளில் பங்கேற்க கால நீட்டிப்பு பெறலாம். சட்டமன்ற உறுப்பினர்களின் சலுகைகளுக்கும் அவர்கள் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுவை சட்டசபைக்கு நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு நியமன எம்.எல்.ஏக்கள் சபை நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

    இதையடுத்து ஆகஸ்டு 1-ந்தேதி சட்டசபை நிகழ்வுகளில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். அப்போது அவர்களுக்கு செப்டம்பர் 11-ந்தேதி வரையிலான காலத்திற்கு மட்டும் எம்.எல்.ஏ அடையாள அட்டை வழங்கப்பட்டது. தற்போது அந்த காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில் சபாநாயகர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். #PuducherryAssembly #NominatedMLAs #Vaithilingam
    தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை போல் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #PuducherryAssembly #NominatedMLAs

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நேரடியாக 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்தது. பாரதிய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டனர்.

    இவர்களது நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என தீர்ப்பளித்தது. இதையடுத்து காங்கிரசார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு எம்.எல்.ஏ.க்கள் நியமனத்துக்கு இடைக் கால தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், நியமனம் எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.


    இதையடுத்து கடந்த மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் கூட்டத்தில் நியமனம் எம்.எல்.ஏ.க்கள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் அவர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய சலுகைகள் எதுவும் வழங்கப்படாது என்றும் தீர்ப்பு வந்த பிறகே நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக இறுதியான முடிவு எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் வைத்திலிங்கம் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது பா.ஜனதா சார்பாக ஆஜரான வக்கீல்கள் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய சலுகைகள் எதுவும் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் அடையாள அட்டை கூட தேதி குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டினர்.

    இதையடுத்து நீதிபதிகள் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய அனைத்து அதிகாரத்தையும் சலுகைகளையும் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதோடு அடுத்த மாதம் 9-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர். #PuducherryAssembly #NominatedMLAs

    3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படாது என்று சட்டசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏனெனில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்புக்கு பிறகே அவர்கள் எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. #PuducherryAssembly #NominatedMLAs

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரையின்றி மத்திய அரசு நேரடியாக 3 எம்.எல்.ஏ.க்களை நியமித்தது.

    எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோருக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.

    ஆனால், எம்.எல்.ஏ.க் களை சட்டசபைக்குள் அனுமதிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் தொடர்ந்து மறுத்து வந்தார். அதோடு எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தை செல்லாது என அறிவிக்க கோரி காங்கிரஸ் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கும் தொடுக்கப்பட்டது.

    ஐகோர்ட்டு மத்திய அரசுக்கு புதுவை சட்ட சபைக்கு எம்.எல்.ஏ.க்களை நியமிக்க அதிகாரம் உள்ளதாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    மேல் முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.

    இதனால் தங்களை சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என நியமன எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.

    இதனிடையே சுப்ரீம் கோர்ட்டு, எம்.எல்.ஏ.க்கள் நியமனத்துக்கு இடைக்கால தடை விதிக்காததால் அவர்களை சபைக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு கவர்னர் கிரண்பேடி நிதி மசோதாவுக்கு அனுமதி அளித்தார்.

    இதையடுத்து கடந்த 1-ந்தேதி கூடிய சட்டசபை கூட்டத்தில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். நிதிமசோதாவும் நிறைவேற்றப்பட்டது.


    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனந்தராமன் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சட்ட சபையில் வாக்களிக்க உரிமை இல்லை என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது சபாநாயகர் வைத்திலிங்கம் வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றினார்.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டின் எதிர்பார்ப்புக்கு இணங்கி 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் சபைக்குள் அனுமதிக்கப்பட்டதாகவும், செப்டம்பர் 11-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அளிக்கும் தீர்ப்புக்கு பிறகு நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.

    இதன் மூலம் சபை நிகழ்வில் பங்கேற்க நியமன எம்.எல்.ஏ.க்கள் அனுமதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய சலுகைகள், உரிமைகள் வழங்கப்படாது என்பது தெரிய வந்துள்ளது.

    வழக்கமாக நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி, அரசு விழாக்களுக்கு அழைப்பு, அரசின் நலத்திட்டங்களை பெற பரிந்துரைக்கும் உரிமை, சட்டசபையில் அறை ஒதுக்கீடு என தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க் களுக்கு உரிய அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.

    ஆனால், பா.ஜனதாவை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படாது என்று சட்டசபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏனெனில் சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்புக்கு பிறகே அவர்கள் எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

    இதனால் நியமன எம்.எல். ஏ.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கிடைக்காது. அரசு விழாக்களுக்கு அழைப்பு அனுப்பப்படாது. மக்கள் நலத்திட்டங்களுக்கு பரிந்துரை செய்ய முடியாது என்ற நிலையே ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சட்டசபை செயலகம் அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தலும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்காவிட்டால் அரசு கடும் விளைவுகளை சந்திக்கும் என்று பாரதிய ஜனதா எச்சரிக்கை விடுத்துள்ளது. #BJP #NominatedMLAs

    புதுச்சேரி:

    புதுவை மாநில பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன் இன்று நிரூபர்களிடம் கூறியதாவது:-

    நாட்டில் 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்தது. இந்த 50 ஆண்டு காலத்தில் நாராயணசாமி எம்.பி.யாக, மத்திய மந்திரியாக, காங்கிரஸ் கட்சியில் உயர்ந்த பொறுப்புகளில் எல்லாம் இருந்தார்.

    இந்த சமயத்தில் புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு புதுவை சட்டமன்றத்தில் 13 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆனால், மாநில அந்தஸ்து பெற நாராயணசாமி எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்காததற்கு நாராயணசாமி தான் காரணம். இதற்கு அவரே பொறுப்பு ஏற்க வேண்டும்.


    புதுவையில் தனி கணக்கை தொடங்குவதற்கு நாராயணசாமியும், காங்கிரஸ் கட்சியுமே காரணமாக இருந்துள்ளது. இதனால் புதுவைக்கான மானியம் படிப்படியாக குறைந்து 30 சதவீதமாக ஆகி விட்டது.

    தற்போது புதுவை ரூ.7 ஆயிரம் கோடி கடனிலும், அதற்கு ரூ. 200 கோடி வட்டி கட்டும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.

    மாநில மக்களை ஏமாற்றுவதற்காக நாராயணசாமி எம்.எல்.ஏ.க்களை அழைத்து கொண்டு டெல்லி சென்று வந்துள்ளார். பிரதமர் நாட்டிலேயே இல்லை என தெரிந்த பிறகும் டெல்லி செல்ல வேண்டிய அவசியம் என்ன? மேலும் ஜனாதிபதியை ஏன் சந்திக்க வில்லை? தனது பதவிக்கு ஆபத்து என்பதால் நாராயணசாமி டெல்லிக்கு சென்று வந்துள்ளார்.

    கவர்னர் கிரண்பேடியை தொடர்ந்து நாராயணசாமி விமர்சித்து வருகிறார். ஆனால், தேசிய அளவில் வெளிவரும் பத்திரிகை கவர்னர் கிரண்பேடியை சிறந்த நிர்வாகியாக தேர்ந்து எடுத்துள்ளது. இது, புதுவைக்கு கிடைத்த பெருமையாகும்.

    சோனியா காந்தியை விட நிர்வாக திறமையில் பல மடங்கு உயர்ந்தவர் கவர்னர் கிரண்பேடி என அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ளது. நிர்வாக திறமையே இல்லாத நாராயணசாமி வேண்டும் என்றே கவர்னர் கிரண்பேடியை விமர்சித்து வருகிறார்.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, புதுவையில் பல முறைகேடு சம்பவங்கள் நடந்தது. பாண்லே மூலமாக பண பரிமாற்றம் நடந்துள்ளது. இது தொடர்பாக பல முறை புகார் செய்தோம்.

    ஆனால், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கை காங்கிரஸ் கட்சிதான் தொடர்ந்தது. சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ததும் காங்கிரஸ் கட்சிதான். ஆனால், கோர்ட்டு தீர்ப்பை அவர்கள் ஏற்க மறுக்கிறார்கள்.

    சட்டமன்றம் எப்போது கூடினாலும் நியமன எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு செல்வோம். சபாநாயகர் இந்த முறை சபைக்குள் அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். இல்லாத பட்சத்தில் சபாநாயகரும், அரசும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

    மாநில அந்தஸ்து தொடர்பாக மக்கள் கருத்தை அறிய வேண்டும். மக்கள் கருத்து எதுவாக இருந்தாலும் அதனை பாரதீய ஜனதா வரவேற்கும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    புதுவை சட்டசபையில் இன்று அனுமதிக்கப்படாததால் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் சபை வாசலிலேயே நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் தவிர 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துக் கொள்ள அதிகாரம் உள்ளது.

    இந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் மாநில அரசின் சிபாரிசின் பேரில் மத்திய அரசு நியமிப்பது வழக்கம்.

    ஆனால் இந்த தடவை மாநில அரசின் சிபாரிசு இல்லாமலேயே மத்திய அரசு பாரதிய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது.

    அவர்களுக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்க மறுத்த நிலையில் கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    அவர்களை எம்.எல்.ஏ.க்களாக ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டார். அதன்பிறகு நடந்த எந்த சட்டமன்ற கூட்டத்திலும் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

    இந்த நிலையில் அவர்கள் நியமனத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் 3 எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என்று தீர்ப்பு கூறப்பட்டது.

    இதையடுத்து கடந்த மார்ச் மாதம் நடந்த கூட்டத்தில் 3 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்குள் நுழைய வந்தனர். அப்போதும் உள்ளே அனுமதிக்கவில்லை.

    இதற்கிடையே ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது. அங்கு வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு எதுவும் விதிக்கவில்லை. அதே நேரத்தில் சட்டமன்றத்துக்குள் எம்.எல்.ஏ.க்கள் செல்லலாம் என்றும் கூறவில்லை.

    இப்போது புதுவை சட்டசபை கூட்டம் நடந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த தடையும் விதிக்காததால் அவர்கள் சட்டசபைக்குள் சென்று பணியாற்றலாம் என்று கவர்னர் கிரண்பேடி கூறியிருந்தார்.

    அதன்படி இன்று சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்வோம் என்று 3 எம்.எல்.ஏ.க்களும் அறிவித்து இருந்தனர். இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியது. அதற்கு முன்னதாகவே அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் சட்டசபைக்கு வந்திருந்தனர்.


    9.35 மணியளவில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் காரில் சட்டசபைக்கு வந்தனர். அவர்களை சட்டசபை வாசல் வரை போலீசார் அனுமதித்தனர்.

    சட்டசபை வளாகம் முழுவதும் சபை காவலர்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அவர்கள் சட்டசபை வாசலை பூட்டு போட்டு பூட்டி இருந்தனர். 3 எம்.எல்.ஏ.க்களும் அங்கு வந்து பூட்டை திறக்கும் படி கூறினார்கள். அதற்கு சபை காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை மட்டுமே உள்ளே அனுப்ப அனுமதி உள்ளது. உங்களை அனுப்ப முடியாது என்று கூறினார்கள்.

    3 எம்.எல்.ஏ.க்களும் அந்த உத்தரவை பிறப்பித்தது யார்? எழுத்துபூர்வமாக அது பிறப்பிக்கப்பட்டுள்ளதா? எழுத்துபூர்வ உத்தரவை எங்களுக்கு காட்டுங்கள் என்று கூறினார்கள்.

    இதைத் தொடர்ந்து சபை காவலர்கள் சபை மார்‌ஷல் ரமேசை அங்கு அழைத்து வந்தனர். அவர் எம்.எல்.ஏ.க்களிடம் பேசினார். எங்களுக்கு சபாநாயகரிடமிருந்து உத்தரவு வந்திருப்பதால் உங்களை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

    அந்த உத்தரவை எழுத்து பூர்வமாக கொடுங்கள், இல்லை என்றால் கேட்டின் மீது ஏறி உள்ளே குதித்து விடுவோம் என்று கூறினார்கள். நான் எழுத்துபூர்வ உத்தரவை வாங்கி வருகிறேன் என்று கூறி விட்டு ரமேஷ் அங்கிருந்து சென்றுவிட்டார். 3 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை வாசலிலேயே நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால் 1 மணி நேரம் அவர்கள் காத்திருந்தபோதும் மார்சல் திரும்பிவரவில்லை. அவர் சபாநாயகர் அருகில் நின்று கொண்டார்.

    இதனால் வேறுவழி தெரியாத 3 எம்.எல்.ஏ.க்களும் 10.35 மணி அளவில் சட்டசபையில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

    அப்போது 19-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடக்கும்போது சபாநாயகர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்று கூறினார்கள்.

    நியமன எம்.எல்.ஏ.க்கள் வருகையையொட்டி சட்டசபையில் கூடுதலாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
    ×