செய்திகள்

மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு மீது சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை

Published On 2018-02-18 20:29 GMT   |   Update On 2018-02-18 20:29 GMT
மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. விரைவில் அது விசாரணைக்கு வருகிறது.
புதுடெல்லி:

மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. விரைவில் அது விசாரணைக்கு வருகிறது.

நமது நாட்டில் மக்கள் தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. 1951-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி மக்கள்தொகை 36 கோடியே 10 லட்சமாக இருந்தது. இது 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 121 கோடியாக உயர்ந்தது. நேற்று மாலை நிலவரப்படி மக்கள் தொகை மேலும் அதிகரித்து 129 கோடியே 14 லட்சத்து 86 ஆயிரத்தை கடந்து விட்டது.

இதே வளர்ச்சி வேகத்தில் மக்கள் தொகை சென்று கொண்டு இருந்தால் 2022-ம் ஆண்டில் 150 கோடியை கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் தொகை தொடர்ந்து ஏறுமுகம் காண்பதால் உள் கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தருவதில் சிக்கல்கள் ஏற்படும்.

இந்த நிலையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கோரி சுப்ரீம் கோர்ட்டில் அனுஜ் சக்சேனா, பிரத்வி ராஜ் சவுகான், பிரியா சர்மா ஆகிய 3 வக்கீல்கள் தனித்தனியே பொது நல வழக்குகளை தொடுத்து உள்ளனர்.

அவற்றில் அவர்கள் மக்கள் தொகை வளர்ச்சிவீதம் பற்றி கவலை தெரிவித்து உள்ளனர்.

மேலும், ஒரு தம்பதிக்கு 2 குழந்தைகள் என்ற கொள்கையை ஊக்குவித்து பரிசு அளிக்கவும், 2 குழந்தைகளுக்கு அதிகமாக பெற்றுக்கொள்கிறவர்களை தண்டிக்க ஏற்ற வகையிலும் கொள்கைகளை இயற்றி நடைமுறைப்படுத்துமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

அத்துடன், உலகிலேயே இந்தியாவில்தான் மிக அதிக அளவில் இளம் வயதினர் உள்ளனர்; ஆனால் மக்கள் தொகை வேகமாக வளர்ச்சி கண்டு வருவதால் அது வேலை இல்லா திண்டாட்டத்துக்கு வழி வகுக்கும் என சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

இந்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.

ஏற்கனவே கடந்த 12-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் அனுபம் பாஜ்பாய் என்பவரும் பெருகிவரும் மக்கள் தொகையினால் கட்டுப்பாட்டுக்குள் உள்ள இயற்கை வளங்கள் மீது மேலும் சுமை ஏறுவதாகவும், தொடர்ச்சியான சீரழிவுக்கு வழிவகுத்து வருவதாகவும் கூறி ஒரு வழக்கு தொடர்ந்து இருப்பது நினைவுகூரத்தக்கது.

Tags:    

Similar News