செய்திகள்

பிரவீண் தொகாடியா குற்றச்சாட்டுக்கு மோடி, அமித்ஷா பதில் அளிக்க வேண்டும்: சிவசேனா வற்புறுத்தல்

Published On 2018-01-19 07:24 GMT   |   Update On 2018-01-19 07:24 GMT
பிரவீண் தொகாடியா குற்றச்சாட்டுக்கு மோடி மற்றும் அமித்ஷா பதில் அளிக்க வேண்டும் என்று சிவசேனா வற்புறுத்தி உள்ளது.

மும்பை:

விசுவ இந்து பரி‌ஷத் சர்வதேச செயல் தலைவர் பிரவீண் தொகாடியா தன்னை போலீஸ் என் கவுண்டர் மூலம் கொல்ல முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டி இருந்தார்.

விவசாயிகள் பிரச்சினை போன்றவை பற்றி குரல் எழுப்புவதால் இந்த சதித்திட்டம் நடக் கிறது என்றும் அவர் தெரிவித்தார். அதன் பின்னர் மீண்டும் பேட்டி அளித்த அவர் டெல்லி பிரதமர் அலுவலகம் தனக்கு எதிராக குஜராத் போலீசாரை தூண்டி விடுகிறது என்று குற்றம்சாட்டினார்.

இது சம்பந்தமாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட் டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

பிரவீண் தொகாடியா தன்னை கொல்ல முயற்சி நடப்பதாக கூறி இருக்கிறார். இந்து ஆதரவு தலைவர்கள் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இருக்கும் இந்த நேரத்தில் இது சம்பந்தமாக பிரதமர் மோடியும், பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷாவும் விளக்கம் அளிக்க வேண்டும்.

இப்போதைய பாரதிய ஜனதா ஆட்சி வந்த பிறகு அத்வானி போன்ற பல தலைவர்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டுள்ளது. இப்போது விசுவ இந்து பரி‌ஷத் செயல் தலைவர் தொகாடியாவின் குரலை ஒடுக்குவதற்கும் சதி நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் நேரடியாகவே பிரதமரை குற்றம் சாட்டி இருக்கிறார்.

சுப்ரீம் கோர்ட்டின் 4 மூத்த நீதிபதிகள் மத்திய அரசு நீதித்துறையில் தலையிடுவதாக குற்றம்சாட்டி இருக்கிறார்கள். அவர்களை தேச விரோதிகள், காங்கிரசின் ஏஜெண்டுகள் என்று கூறுகிறார்கள்.

அதேபோல் பிரவீண் தொகாடியாவுக்கு என்ன பட்டம் கொடுக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

இவ்வாறு அந்த கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.

Tags:    

Similar News