செய்திகள்

ஆதார் இல்லாததால் சிகிச்சை மறுக்கப்பட்ட பெண் பலி: விசாரணை நடத்த அரியானா அரசு உத்தரவு

Published On 2017-12-30 19:19 GMT   |   Update On 2017-12-30 19:19 GMT
ஆதார் அட்டை இல்லாததால் சிகிச்சை மறுக்கப்பட்ட பெண் இறந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்த அரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சண்டிகர்:

ஆதார் அட்டை இல்லாததால் சிகிச்சை மறுக்கப்பட்ட பெண் இறந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்த அரியானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமண தாஸ். ராணுவ வீரரான இவர் கார்கில் போரில் உயிரிழந்தார். இவரது மனைவி சகுந்தலா. இவரது மகன் பவன்குமார்.

கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டு இருந்த சகுந்தலா உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அவரது மகன் பவன்குமார் சோனிபட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் சகுந்தலாவை அனுமதிக்க ஆதார் அட்டை கேட்டனர்.

பவன்குமார் தனது மொபைலில் இருந்த தாயின் ஆதார் அட்டையின் புகைப்படத்தை காட்டினார். ஆனால், அசல் ஆதார் அட்டை இல்லாததால் மருத்துவமனையில் சகுந்தலாவை அனுமதிக்க முடியாது எனக் கூறினர். இதையடுத்து, பவன்குமார் சகுந்தலாவை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவர் இறந்தார். ஆனால், பவன்குமாரின் புகாரை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

இந்நிலையில், அரியானா மாநில சுகாதார துறை மந்திரி அனில் விஜ், இதுதொடர்பாக விசாரணை நடத்த ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதார் இல்லாததால் சிகிச்சை மறுக்கப்பட்டு ராணுவ வீரரின் மனைவி இறந்த விஷயம் எனது கவனத்துக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை குழு அமைக்கப்படும். அந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News