செய்திகள்

தமிழக மீனவர்கள் 400 பேரை காணவில்லை: மத்திய அரசு அறிவிப்பு

Published On 2017-12-27 07:48 GMT   |   Update On 2017-12-27 07:48 GMT
ஒக்கி புயலில் அடித்து செல்லப்பட்டவர்களில் டிச.15-ம் தேதி வரை தமிழக மீனவர்கள் 400 பேரை காணவில்லை என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி விசிய ஒக்கி புயல் தாக்குதலில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மாயமாகினர். அவர்களில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் ஏராளமானோர் காணாமல் போயினர்.

அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் பலர் வீடு திரும்பவில்லை. மாயமான மீனவர்களை மீட்டுத் தரும்படி மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி கன்னியகுமரி மாவட்டத்தில் போராட்டங்கள் நடந்தன. மீனவர்களும், பொது மக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பஸ் மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்களால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

அதை தொடர்ந்து மாயமான மீனவர்களை தேடும்படி தீவிரப்படுத்தப்பட்டது. இந்திய கடலோர பாதுகாப்பு படையினரும் அவர்களை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒக்கி புயல் தாக்குதலில் சிக்கிய மீனவர்கள் குறித்த அறிக்கையை இன்று வெளியிட்டது.

அதில் ‘‘ஒக்கி புயலில் சிக்கிய மீனவர்களில் டிசம்பர் 15-ந்தேதி வரை 845 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 453 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

மேலும் கேரளாவை சேர்ந்த 362 பேரும், லட்சத்தீவு மற்றும் இதர பகுதிகளை சேர்ந்த 30 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் ஒக்கி புயலில் சிக்கி மீனவர்களில் 661 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களில் 400 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 261 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்.

லட்சத்தீவை பொறுத்த வரை மாயமான மீனவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மாநில அரசு கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும் அதன் மூலம் மத்திய அரசு சேகரித்த தகவல்களின் அடிப்படையில் இது வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News