செய்திகள்

உ.பி.யில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு மரணத்தண்டனை - புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்

Published On 2017-12-23 06:03 GMT   |   Update On 2017-12-23 06:14 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
லக்னோ:

உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடிப்பதால் இறப்பவர்கள், கண், உடல் உறுப்புகளை இழப்பவர்களின் எண்ணிக்கை  ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அண்டை மாநிலமான அரியானாவில் இருந்து கள்ளத்தனமாக கொண்டு வரப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் ஆசம்கார்க் மாவட்டத்தில் 17 பேரும், லக்னோவில் 28 பேரும் இறந்தனர். மேலும், இட்டா, பருக்காபாத் மாவட்டங்களில் 30 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமைகள் ஆணையமும் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.



இதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் புதிய மசோதா ஒன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கள்ளச்சாராயம் குடித்ததால் மரணம் ஏற்பட்டால் விற்றவருக்கு மரணத்தண்டனை, ஆயுள் தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

கள்ளச்சாராயத்தினால் உடல் ஊனம் ஏற்பட்டால் விற்றவருக்கு 10 ஆண்டிலிருந்து 6 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் 5 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் வரை அபராதம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மசோதாவிற்கு நேற்று சட்டசபையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

டெல்லி, குஜராத்திற்கு பிறகு கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டம் நடைமுறைப்படுத்த உள்ள மாநிலம் உத்தரப்பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News