செய்திகள்

ஜெயிலில் சசிகலாவுக்கு சலுகைகள்: தகவல் உரிமை ஆணையத்தில் டி.ஐ.ஜி. ரூபா புகார்

Published On 2017-12-17 12:31 GMT   |   Update On 2017-12-17 12:31 GMT
பெங்களூர் ஜெயிலில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது குறித்து டி.ஐ.ஜி. ரூபா தகவல் பெறும் உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா பெங்களூர் ஜெயிலில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாவும், இதற்காக அவர், டி.ஜி.பி. சத்யநாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாவும் பரபரப்பு புகார் தெரிவித்தார்.

இது குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். இதில் சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மை என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் டி.ஜி.பி.யாக இருந்த சத்ய நாராயனராவ், தன் மீது குற்றச்சாட்டுகள் கூறிய டி.ஐ.ஜி. ரூபா மீது பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் ரூ.4 கோடி கேட்டு மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்தார். 

நேற்று இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது ரூபா தரப்பில் வக்கீல் வாதத்தை எழுத்து பூர்வமாக தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து நீதிபதி இவ்வழக்கை வருகிற பிப்ரவரி மாதம் 16-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார். இது குறித்து சத்யநாராயணராவ்  பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த நிலையில்  டி.ஐ.ஜி. ரூபா இந்த விவகாரம் குறித்து சிறை விவகாரங்களுக்கான ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் அளித்தார். அதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் அவர் தகவல் பெறும் உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

அந்த புகாரில், நான் அளித்த புகார் மீது பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக சிறை விவகாரங்களுக்கான ஊழல் தடுப்பு ஆணையம் எவ்வித தகவலும் தரவில்லை. ஊழல் தடுப்பு ஆணையம் எனது புகாரை பதிவு செய்ய மறுத்து விட்டது. புகாரை பதிவு செய்யாததன் மூலம் அவர்கள், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறியுள்ளனர்.
ஆகவே மேற்கண்ட வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரியான நான் எனது புகாரின் நிலையை தகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.) மூலம் கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.

இதனால் நான் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு விரிவான அறிக்கையுடன் புகார் அளித்தேன். 70 பக்க அறிக்கையில் சிறையில் உள்ள பண பரிமாற்றம், ஊழல் மற்றும் முறைகேடுகள் உள்ளிட்ட அனைத்தையும் நான் குறிப்பிட்டுள்ளேன். இதற்கு  தீவிர விசாரணை வேண்டும் என கருதுகிறேன். ஊழல் தடுப்பு சட்டத்தின் 13 (1)(சி) பிரிவின் கீழ் சாதாரன கைதியாக உள்ள சசிகலாவுக்கு சிறப்பு  வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறியிருந்தார். 
Tags:    

Similar News