செய்திகள்
செம்மரம் கடத்தியதாக கைதான 3 பேரை படத்தில் காணலாம்.

திருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு: 3 பேர் கைது

Published On 2017-12-14 06:59 GMT   |   Update On 2017-12-14 07:00 GMT
திருப்பதி அருகே செம்மர கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் திருவண்ணாமலையை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.

திருப்பதி:

திருப்பதி அடுத்த ஸ்ரீவாரி மெட்டு வன பகுதியில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வாசு தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த எலகம்பட்டை சேர்ந்த முத்து என்பவரது மகன் சின்னபையன் என்பதும் திருப்பதி வன பகுதியில் செம்மரம் வெட்ட வந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் தான் தண்ணீர் பிடித்து செல்ல வந்ததாகவும் தன்னுடன் வந்த 14 பேர் அருகில் வன பகுதியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சின்ன பையனை முன்னாள் விட்டு போலீசார் பின் தொடர்ந்து சென்றனர்.

போலீசார் வருவதை கண்ட செம்மர கடத்தல் கும்பல் போலீசாரை நோக்கி கற்களை வீசினர். கல்வீச்சில் லட்சுமி நாராயணா என்ற போலீஸ்காரருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து செம்மரம கடத்தல்காரர்களை சரணடைய வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். எச்சரிக்கையை மீறி தொடர்ந்து கற்களை வீசியதால் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதனால் பயந்து போன செம்மர கடத்தல் கும்பல் தப்பி ஓடினர். அவர்களை விரட்டி சென்ற போலீசார் 2 பேரை மடக்கி பிடித்தனர்.

மேலும் கடத்தல் கும்பல் விட்டு சென்ற 13 செம்மரங்களை பறிமுதல் செய்தனர். பிடிப்பட்ட 2 பேரிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் படவேடை சேர்ந்த சுரேஷ், அதே பகுதியை சேர்ந்த முருகன் என தெரிய வந்தது.

3 பேரையும் கைது செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 



Tags:    

Similar News