செய்திகள்

சபரிமலையில் தரிசனத்திற்கு காத்திருந்த தமிழக பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Published On 2017-12-10 13:08 GMT   |   Update On 2017-12-10 13:08 GMT
சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
சபரிமலை:

கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டின் மண்டல பூஜை கடந்த மாதம் 16-ம் தேதி தொடங்கியது. டிசம்பர் 27-ம் தேதிவரை மண்டல பூஜை நடைபெறுகிறது. அதன்பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டு, ஜனவரி 20-ம் தேதி நடை சாத்தப்படும்.

கார்த்திகை முதல் நாள் மாலையிடத் தொடங்கிய பக்தர்கள், மண்டல பூஜைக்காக கோயிலுக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்து பல லட்சம் பக்தர்கள் மாலை அணிந்து கோயிலுக்கு செல்கின்றனர். இதனால் கோயில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக போலீசார் பேரிகார்டுகள் அமைத்து, பக்தர்களை தரிசனத்திற்கு அனுப்புகிறார்கள். தரிசனத்திற்காக 15 மணி  நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் திடீரென இன்று அதிகாலை 5 மணியளவில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.  விசாரணையில் அவர் மதுரையைச் சேர்ந்த பாலு (வயது42) என்பது தெரியவந்துள்ளது.

தரிசனத்திற்கு காத்திருந்த பக்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது பக்தர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News