செய்திகள்

களியக்காவிளை அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழிக்க முயற்சி: தொழிலாளி கைது

Published On 2017-11-24 11:42 GMT   |   Update On 2017-11-24 11:42 GMT
களியக்காவிளை அருகே 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி கற்பழிக்க முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:

களியக்காவிளை அருகே உள்ள பாறசாலை பகுதியைச் சேர்ந்த 15 வயது மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தினமும் அவர், பஸ் மூலம் பள்ளிக்கூடத்திற்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று அந்த மாணவி காலையில் வழக்கம்போல பள்ளிக்கூடத்திற்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பள்ளிக்கூடத்தில் இருந்து பஸ் மூலம் பாறசாலை சோதனை சாவடியில் இறங்கிய அந்த மாணவி வயல்வெளி பகுதி வழியாக தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை பள்ளிக்கூடத்தில் இருந்து அதே பஸ்சில் பின் தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து வழி மறித்தார். பிறகு அந்த மாணவியை தூக்கிச் சென்று கற்பழிக்க முயன்றார்.

இதனால் பயந்து போன அந்த மாணவி அவரிடம் போராடி விடுபட்டார். பிறகு அங்கிருந்து ஊருக்குள் சென்ற அந்த மாணவி நடந்த சம்பவத்தை கூறி அழுதார். ஊர் பொதுமக்கள் அந்த வாலிபரை தேடிச்சென்ற போது அவர் தப்பியோடி விட்டது தெரிய வந்தது.

இதுபற்றி பாறசாலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பாறசாலை சோதனை சாவடி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் அந்த வாலிபர் யார்? என்பது அடையாளம் காணப்பட்டது.

அதன் அடிப்படையில் அந்த வாலிபரை குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் உள்ள மதுபான பாரில் வைத்து பாறசாலை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர், கொல்லங்கோடு வெங்கஞ்சி பகுதியைச் சேர்ந்த மோகன் குமார் (வயது 41) என்ற கூலித் தொழிலாளி என்பது தெரிய வந்தது. அவர் மீது கற்பழிப்பு முயற்சி, பெண் வன்கொடுமை சட்டம் போன்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News