செய்திகள்

முன்னாள் மத்திய மந்திரி பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி மறைவு: சோனியா காந்தி இரங்கல்

Published On 2017-11-20 10:07 GMT   |   Update On 2017-11-20 10:07 GMT
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷியின் மறைவுக்கு சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய அவர் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இவர் மத்திய மந்திரியாக பதவி வகித்தார். இதுதவிர அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பணியாற்றினார்.

இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. பக்கவாதம் ஏற்பட்டதால் அவரால் பேச முடியாமல் போனது. கைகால்களும் செயலிழந்தன. இதனால், டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். ஆனால், அவரது உடல்நிலை தேறவில்லை. கோமா நிலைக்குச் சென்றார். சுமார் 8 ஆண்டுளாக மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்த தாஸ்முன்ஷி, இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 72.

அவரது உடல் மருத்துவமனையில் இருந்து டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் உயர் தலைவர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.



தாஸ் முன்ஷியின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், தாஸ்முன்ஷியின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ளார்.

‘பயபக்தியுள்ள அரசியல் ஆர்வலரான தாஸ் முன்ஷி, மேற்கு வங்கத்தின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர். கட்சிக்கும் அரசுக்கும் ஒப்பற்ற சேவை செய்துள்ளார். கட்சி வளர்ச்சிக்காக அடிமட்டத்தில் இருந்து அவர் பணியாற்றிய விதம், வருங்கால சந்ததியினர் நினைவில் கொள்ள வேண்டும். அவரது மனைவி தீபா தாஸ்முன்ஷி மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என சோனியா கூறியுள்ளார்.
Tags:    

Similar News