செய்திகள்

நேரு, இந்திராவை புறக்கணித்து பா.ஜ.க. ஆணவத்துடன் நடந்து கொள்கிறது: சோனியாகாந்தி கடும் தாக்கு

Published On 2017-11-20 09:35 GMT   |   Update On 2017-11-20 09:35 GMT
ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி சேவைகளை புறக்கணித்து, ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த நாள் முதல் பாரதிய ஜனதா ஆணவத்துடன் செயல்படுகிறது என்று காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசினார்.
டெல்லியில் இன்று நடந்த காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் சோனியா பேசினார். அவர் கூறியதாவது:-

இந்தியாவில் அதிகம் பேர் நேசிக்கும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான். மற்ற எந்த கட்சிகளையும் விட காங்கிரஸ் கட்சிக்கே அதிக வாக்கு வங்கி உள்ளது.

காங்கிரசில் உள்ள சில அம்சங்களால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து விட்டது. ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த நாள் முதல் பா.ஜ.க.வினரின் நடவடிக்கைகள் மிகவும் ஆணவமாக உள்ளன.

நாட்டுக்காக ஜவகர்லால் நேருவும், இந்திரா காந்தியும் செய்த சேவைகள், தியாகங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. அவர்களது அரசியல் பணி மறைக்கப்படுகிறது.

இதன் மூலம் வரலாற்றை மாற்றி அமைக்கும் முயற்சிகளில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். ஆனால் அவருக்கு இதில் வெற்றி கிடைக்கப்போவது இல்லை.

பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்று பதில் சொல்ல பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை. இதனால்தான் அவர் பாராளுமன்ற கூட்டத் தொடர்களை எதிர்கொள்ள தயங்குகிறார்.

வழக்கமாக குளிர்கால கூட்டத்தொடர் தேவையான அளவுக்கு நடைபெறும். ஆனால் தற்போது குளிர்கால கூட்டத்தொடரை ஒரு வாரத்தில் முடக்க பா.ஜ.க.வில் சதி நடக்கிறது. இதற்கு மக்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.

இவ்வாறு சோனியா பேசினார்.
Tags:    

Similar News