செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்ற ஆந்திர பெண் திருப்பி அனுப்பப்பட்டார்

Published On 2017-11-19 14:01 GMT   |   Update On 2017-11-19 14:01 GMT
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்ற 31 வயது ஆந்திர பெண் பதினெட்டாம்படி அருகில் தடுத்து நிறுத்தப்பட்டு திரும்ப அனுப்பப்பட்டார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் 10-ல் இருந்து 50 வயதிற்குட்பட்ட பெண்கள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்நிலையில், ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண் தனது குடும்பத்தினருடன் ஐயப்பன் கோவிலுக்கு வந்துள்ளார். கோவிலுக்குள் நுழைய முயன்ற அவரை பதினெட்டாம்படி அருகே கோவில் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். அந்த பெண்ணிடம் அடையாள அட்டையை காட்டுமாறு அவர்கள் கேட்டுள்ளனர். அடையாள அட்டையை சரிபார்த்தபோது அந்த பெண்ணுக்கு 31 வயதுதான் பூர்த்தியாகியுள்ளது.

இதையடுத்து அந்த பெண்ணை அங்கிருந்த காவலர்கள் கோவிலுக்குள் செல்ல விடாமல் திருப்பி அனுப்பினர். பக்தர்கள் பாதயாத்திரையை தொடங்கும் பம்பை நதி அருகே பெண்கள் நுழையாமல் தடுப்பதற்காக போலீஸ் பலத்த கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் அந்த பெண் எப்படி பதினெட்டாம்படி வரை வந்தார் என்பது பற்றி கோவில் நிர்வாகத்தினர் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News