செய்திகள்

இந்தியாவைப் பற்றி பொய் பிரச்சாரம்: பாக். பாதுகாப்பு அமைச்சக ட்விட்டர், பேஸ்புக் பக்கம் முடக்கம்

Published On 2017-11-19 02:22 GMT   |   Update On 2017-11-19 02:23 GMT
இந்தியாவைப்பற்றி தவறான தகவல் தெரிவிக்கும் வகையில் போலியான புகைப்படத்தை பதிவு செய்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

நாட்டின் சில பகுதிகளில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெற்ற தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி கவல்ப்ரீத் கவுர், தனது கையில் ‘நான் இந்திய குடிமகள், அரசியல் சாசனத்தில் உள்ள மதச்சார்பின்மைக்காக துணை நிற்பேன்’ என்று எழுதப்பட்ட அட்டையை கையில் வைத்தபடி கடந்த ஜூலை மாதத்தில் புகைப்படம் பதிவிட்டுள்ளார்.

ஆனால், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில், கவுரின் புகைப்படத்தில் இருந்த வார்த்தைகள் மாற்றப்பட்டு, இந்தியாவைப்பற்றி அவதூறாக இருக்கும் வகையில் வாசகங்களை இடம் பெறச்செய்து சித்தரிக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு பொய் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

முடக்கப்பட்ட பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சக ட்விட்டர் பக்கம்

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்திற்கு எதிராக ட்விட்டர் நிறுவனத்தில் புகாரளிக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த ட்விட்டர் மற்றும் பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டது. பாகிஸ்தானின் இந்த செயலுக்கு அந்நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐ.நா சபையில், இந்தியாவைப்பற்றி போலியான புகைப்படத்தை காண்பித்து அந்நாட்டின் பிரதிநிதி மூக்குடைபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News