செய்திகள்

பத்மாவதி படம் வெளியானால் கலவரம் வெடிக்கும் அபாயம்: மத்திய அரசுக்கு கடிதம்

Published On 2017-11-17 05:43 GMT   |   Update On 2017-11-17 05:43 GMT
உத்தரபிரதேசத்தில் பத்மாவதி படம் வெளியானால் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்படும் என்று மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் அனுப்பி உள்ளது.
லக்னோ:

நடிகை தீபிகா படுகோனே நடித்த பத்மாவதி இந்திப் படம் வருகிற 1-ந்தேதி திரைக்கு வருகிறது. ரஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த சித்தூர் ராணி பத்மினியின் கதையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.

ராணி பத்மினியை விரும்பும் சுல்தான் அலாவுதீன் கில்ஜியாக ரன்பீர்சிங் நடித்துள்ளார். பத்மாவதி படத்துக்கு ராஜபுத்ர வம்சத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நடிகை தீபிகா படுகோனே, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோருக்கும் ரஜபுத்திர கர்னி சேனா அமைப்பு பகீரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளது.

இருவரது தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 கோடி பரிசு வழங்கப்படும் என்று உத்தரபிரதேசத்தின் மீரட் நகரைச் சேர்ந்த தாகூர் இனத்தலைவர் தாகூர் அபிஷேக்சாம் அறிவித்துள்ளார். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தீபிகா, சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே பத்மாவதி படம் வெளியானால் உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று மத்திய அரசுக்கு மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில உள்துறை செயலாளர் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

பத்மாவதி படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. வரலாற்று உண்மைகளை சிதைக்கும் வகையில் படம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. படம் வெளியானால் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் கலவர அபாயம் உள்ளது.

மாநிலம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. டிசம்பர் 2-ந்தேதி மிலாது நபியை யொட்டி முஸ்லிம்கள் ஊர்வலம் நடத்துவார்கள்.

இதேபோல் கர்னிசேனா அமைப்பும் பத்மாவதி படத்தை எதிர்த்து கண்டன ஊர்வலம் நடத்தப் போவதாகவும் 1-ந்தேதி முழு அடைப்பு நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது. இது போன்ற சூழ்நிலையில் படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் ஏற்படும்.

பொதுமக்களின் உணர்வுகளுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள படத்துக்கு மத்திய தணிக்கை குழு சான்றிதழ் அளித்ததை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் உணர்வுகளை அடிப்படையாக கொண்டும், பல்வேறு பிரிவினர் இடையே மோதல் மற்றும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எடுக்கப்படும் படங்களுக்கு மத்திய தணிக்கை குழு கவனமுடன் சான்றிதழ் அளிக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆஜ்மீர் தர்கா திவான் ஜைனுல் ஆபிதீன் அலிகான் பத்மாவதி படத்துக்கு பிரதமர் மோடி தடை விதிக்க வேண்டும் என்று கூறி ரஜபுத்ர வம்சத்தினருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News