செய்திகள்

நீதிபதிகள் பெயரில் லஞ்சம்: சிறப்பு விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்டு

Published On 2017-11-14 11:17 GMT   |   Update On 2017-11-14 11:17 GMT
மருத்துவ கல்லூரி சேர்க்கை தொடர்பான வழக்கு ஒன்றில் நீதிபதிகள் பெயரில் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகார் குறித்து சிறப்பு விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
புதுடெல்லி:

மருத்துவக் கல்லூரி சேர்க்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், ஒரு தரப்புக்கு சாதகமாக தீர்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி பெருமளவிலான தொகையை லஞ்சமாகப் பெற்றதாக, ஒடிசா மாநில முன்னாள் நீதிபதி இஷ்ரத் மஸ்ரூர் குத்துஸி உள்ளிட்ட சிலர் மீது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் முன்னாள் தலைவரும், மூத்த வழக்குரைஞருமான துஷ்யந்த் தவே, வழக்குரைஞர் காமினி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்தனர். அதில், "உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வரும் வழக்குதான் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது. எனவே, இந்த வழக்கை அவரது தலைமையிலான அமர்வு விசாரிக்கக் கூடாது' என்று கோரியிருந்தார். இதனை, அவசர வழக்காக ஏற்க வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.

மேலும், நீதிபதிகளின் பெயரில் லஞ்சம் பெறப்பட்ட விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைக்க உத்தரவிட வேண்டும் எனவும் காமினி ஜெய்ஸ்வால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டிருந்தது.

சில நாள்களுக்கு முன்பு இந்த வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல்சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது. ஆனால், அடுத்த நாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு இந்த உத்தரவை ரத்து செய்தது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தவிர வேறு நீதிபதிகள் யாரும் அரசியல்சாசன அமர்வுக்கு ஒரு வழக்கை மாற்ற முடியாது என்று அப்போது அந்த அமர்வு கூறியது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், அருண் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர் ஆகிய மூவர் அடங்கிய அமர்வு முன்பு, இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நாங்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் இல்லை. ஆனால், நடைமுறையை பின்பற்ற வேண்டும். நீதிபதிக்கு எதிராக எப்.ஐ.ஆர் பிறப்பிக்க முடியாது’ என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு எனக்கூறிய நீதிபதிகள், இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News