செய்திகள்

ஒரே வாரத்தில் தொடர்ந்து 4-வது பிரச்சனையில் சிக்கிய இண்டிகோ விமான நிறுவனம்

Published On 2017-11-13 22:59 GMT   |   Update On 2017-11-13 23:00 GMT
திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ விமானம் ஒன்று தீ விபத்து காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பெங்களூர்:

திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் சென்ற இண்டிகோ விமானம் ஒன்று தீ விபத்து காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. சாதாரண ஓடுதளத்தில் இறங்க வேண்டிய அந்த விமானம் அவசர ஓடுதளத்தில் இறக்கப்பட்டது.

தொடர்ந்து ஒரு வாரமாக இண்டிகோ நிறுவன விமானங்களில் நிறைய பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன் அந்த நிறுவன ஊழியர் ஒருவர் பயணி ஒருவரை மோசமாக தாக்கினார்.

சில நாட்களுக்கு முன் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து டெல்லியில் இருந்து மும்பைக்கு சென்று இருக்கிறார். அப்போது அவர் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தின் ஊழியர் ஒருவர் அவரை மிகவும் தகாத முறையில் நடத்தி இருக்கிறார். அஜிதேஷ் என்ற பெயர் கொண்ட அந்த விமான ஊழியர் சிந்துவை மிகவும் மோசமாக நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பி.வி. சிந்து டிவிட்டரில் இண்டிகோ நிறுவனத்தில் சரியான சேவை இல்லை என கூறியிருந்தார்.

சென்னையில் இருந்து இண்டிகோ விமானத்தில் டெல்லி சென்ற பயணி டெல்லியில் இறங்கிய போது அவரிடம் இண்டிகோ ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். இரண்டு இண்டிகோ விமான ஊழியர்கள் சேர்ந்து அந்த பயணியைத் தாக்கி கீழே விழச் செய்து இருக்கின்றனர். இது சில நாள் முன்பு வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவியது. இதில் ஊழியர்களின் முரட்டுத்தனத்தை பலரும் கண்டித்து பதிவு செய்து இருந்தனர்.

அதேபோல் இன்று லக்னோவில் விமானத்திற்காக காத்திருந்த பெண் பயணி ஒருவரை இண்டிகோ ஊழியர்கள் மிகவும் மோசமாக நடத்தி இருக்கின்றனர். மாற்றுத்திறனாளி பெண்ணான அவரை இண்டிகோ ஊழியர் சக்கர நாற்காலியில் அழைத்து சென்று இருக்கிறார். ஆனால் இவர் வண்டியை மோசமாக தள்ளியதில் அந்த பெண் பாதி வழியில் கீழே விழுந்து இருக்கிறார். இதில் அவருக்கு மோசமாக அடிபட்டு இருக்கிறது.

இந்நிலையில், இன்று திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில் தீ பிடித்ததாக கூறப்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சாதரண ஓடுதளத்தில் இறங்க வேண்டிய அந்த விமானம் அவசர ஓடுதளத்தில் இறக்கப்பட்டது. விமானத்திலிருந்து இண்டிகோ ஊழியர் ஒருவரின் லேப்டாப்பில் இருந்த வந்த புகைதான் பதட்டத்திற்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒரே வாரத்தில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக இண்டிகோ நிறுவனம் இப்படி பிரச்சனையில் சிக்கி இருக்கிறது. கடத்த மூன்று சம்பவங்களுக்கும் இண்டிகோ நிறுவனம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது. அதேபோல் கடைசியாக நடந்த தீ விபத்து சம்பவத்திற்கும் அந்த நிறுவனம் மன்னிப்பு கேட்டிருக்கிறது.
Tags:    

Similar News