செய்திகள்

நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவில் வடமாநில தொழிலாளர்களுக்கு தனி விடுதி

Published On 2017-11-13 16:17 GMT   |   Update On 2017-11-13 16:17 GMT
இந்தியாவிலேயே மாநிலங்களுக்கிடையே புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக 640 பேர் தங்கும் வசதி கொண்ட தனி விடுதியை கேரள அரசு கட்டியுள்ளது.
திருவனந்தபுரம்:

நாட்டின் வடக்குப்பகுதியில் உள்ள பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள அசாம், மணிப்பூர் மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்புக்காக தமிழகம், கேரளா, கர்நாடகம் ஆகிய தெற்கு மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் புலம்பெயர்ந்து உள்ளனர்.

கட்டுமான பணிகள், தொழிற்சாலைகள் மற்றும் உணவகங்களில் நான் அன்றாடம் பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் தங்குவது தகர கூரைகளின் கீழ்தான். கேரள மாநிலத்தில் மட்டும் 25 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் வடமாநில தொழிலாளர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வாட்சப் போன்ற சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவியது.

இதன் காரணமாக அவர்கள் அனைவரும் பீதியடைந்து தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர். காலப்போக்கில் இது சரியானாலும், அவர்களுக்கு சரியான இருப்பிட வசதி செய்து தரப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு பகுதியில் கேரள அரசின் பொதுத்துறை நிறுவனம் மூலம் இதற்கான கட்டுமானப்பணிகள் முடிவுற்றுள்ளது. 3 மாடிகளை கொண்ட இந்த விடுதியில் 640 பேர் வரை தங்கலாம். 32 சமையலறை, 86 பாத்ரூம்கள், 8 உணவு உண்ணும் அறை என விலாசமாக விடுதி கட்டப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களிலும் இது போன்ற விடுதியை கட்ட இருப்பதாக அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News