செய்திகள்

இமாச்சல் சட்டசபை தேர்தல்: 74 சதவீதம் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் தகவல்

Published On 2017-11-09 13:46 GMT   |   Update On 2017-11-09 13:47 GMT
இமாச்சல பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் 74 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிம்லா:

இமாச்சல பிரதேசத்தில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 36 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. வீரபத்ர சிங் (83) முதல் மந்திரி ஆனார். பாரதிய ஜனதா 26 தொகுதிகளை பிடித்தது. 
 
68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

காங்கிரஸ் சார்பில் முதல் மந்திரி வீரபத்ர சிங் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பா.ஜ.க. சார்பில் பிரேம்குமார் துமால் முதல் மந்திரி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர்களுக்கிடையே கடும் போட்டி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்பட முக்கிய தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.



காங்கிரஸ், பா.ஜ.க. அனைத்து தொகுதிகளிலும் தங்களது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி 42 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தம் 74 சதவீதம் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இந்த முறை தான் மிக அதிக அளவாக பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு முடிவு பெறாததால் சில சதவீதங்கள் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 18-ம் தேதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News