செய்திகள்

ஜி.எஸ்.டி.யால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வலியை பிரதமர் புரிந்து கொள்ளவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published On 2017-10-31 01:21 GMT   |   Update On 2017-10-31 01:21 GMT
பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி.யால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வலியை பிரதமர் புரிந்து கொள்ளவில்லை என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
புதுடெல்லி:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமல் படுத்திய பணமதிப்பு நீக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) போன்றவற்றால் இந்திய பொருளாதாரம் சரிவடைந்தது இருப்பதாகவும், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

எனவே பணமதிப்பு நீக்கம் அமல்படுத்தப்பட்ட நவம்பர் 8-ந்தேதியை நாடு முழுவதும் கருப்பு தினமாக அனுசரிக்கவும் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இதற்கு பதிலடியாக அந்த தினத்தை கருப்பு பணம் ஒழிப்பு தினமாக கடைப் பிடிக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் இந்த திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வரும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர்களின் கூட்டத்தை நேற்று டெல்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் நடத்தினார். இதில் பணமதிப்பு நீக்கத்தை எதிர்த்து கருப்பு தினமாக அனுசரிக்கும் வருகிற 8-ந்தேதியன்று மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் குறித்து அவர்களிடம் விளக்கினார்.

பின்னர் ஜி.எஸ்.டி. மற்றும் பணமதிப்பு நீக்கத்தின் பாதிப்புகள் குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடனும் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், டெல்லி மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், மூத்த தலைவர் அகமது படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டங்களுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:-

பணமதிப்பு நீக்கம் ஒரு பேரழிவு. நவம்பர் 8-ந்தேதி, இந்தியாவுக்கு சோக தினம் ஆகும். பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி.யால் இந்திய பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய சேதத்தை பிரதமர் ஏற்படுத்தி விட்டார். ஜி.எஸ்.டி., ஒரு சிறந்த யோசனை ஆகும். ஆனால் அதை அரசு தவறாக அமல்படுத்தியதால் நாட்டு மக்களுக்கு ஏராளமான துயரங்கள் ஏற்பட்டன.

பணமதிப்பு நீக்கத்தின் முதலாமாண்டு தினத்தை கருப்பு பண ஒழிப்பு தினமாக மத்திய அரசு கொண்டாடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இதில் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது? இதனால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை குறித்து அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.



மாறாக இதை கொண்டாடுவது என்பது, பணமதிப்பு நீக்கம் மற்றும் தவறாக அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி.யால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வலியை பிரதமர் புரிந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

ராகுல் காந்தி நடத்திய கூட்டங்களுக்குப்பின் கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, செய்தி தொடர்பாளர் ஆர்.பி.என்.சிங், கட்சித்தலைவர் மன்பிரீத் பாதல் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

இந்தியாவின் மிகப்பெரிய ஊழல், பணமதிப்பு நீக்கம் ஆகும். தற்போது கூட அதன் விளைவுகளில் சிக்கி நாட்டின் பொருளாதாரம் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. மிகப்பெரிய இந்த பேரழிவின் முதல் ஆண்டு தினத்தை கருப்பு தினமாக அனுசரிக்கும் வேளையில், அன்றைய தினம் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

அதன்படி அனைத்து மாநிலம் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் ‘இந்தியா தொடர்ந்து பாதிக்கப்படுகிறது’ என்ற தலைப்பில் போராட்டங்கள் நடத்தப்படும். மேலும் பணமதிப்பு நீக்கத்தை பிரதமர் அறிவித்த இரவு 8 மணியை நினைவுகூரும் நோக்கில், அன்று இரவு 8 மணிக்கு ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்டங்களின் தலைநகரங்களில் மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தப்படும்.

பொதுமக்களை அவதிக்குள்ளாக்கும் இந்த பிரச்சினைகளுக்கு பா.ஜனதா அரசு தீர்வு காணும் வரை காங்கிரஸ் கட்சி ஓயாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News