செய்திகள்

அயோத்தி-பைசலாபாத் மாநகராட்சி தேர்தல்: சமாஜ்வாடி சார்பில் திருநங்கை வேட்பாளர்

Published On 2017-10-30 05:42 GMT   |   Update On 2017-10-30 06:47 GMT
அயோத்தி மற்றும் பைசலாபாத் மாநகராட்சி தேர்தலில் சமாஜ்வாடி சார்பில் மேயர் வேட்பாளராக திருநங்கை குல்‌ஷன் பிந்து நிறுத்தப்பட்டுள்ளார்.

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் (நவம்பர்) உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி தனது வலிமையை காட்ட வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று அந்த கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் மாநகராட்சி மேயர் பதவிக்கான 7 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அந்த 7 பேரில் ஒருவர் திருநங்கை ஆவார். அவரது பெயர் குல்‌ஷன் பிந்து. இவர் பைசாலாபாத் -அயோத்தி மாநகராட்சி மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் உள்ள திருநங்கை தொண்டர்களில் குல்‌ஷன் பிந்து மிகவும் புகழ் பெற்றவராகத் திகழ்கிறார். அதிலும் பைசாலாத் நகரில் அவருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது. கடந்த உள்ளாட்சி தேர்தலில் இவர் பைசாலாத் நகரசபை தலைவர் பதவிக்கு சமாஜ்வாடி சார்பில் நிறுத்தப்பட்டிருந்தார்.

அந்த தேர்தலில் 200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். கடந்த 2012-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி சார்பில் போட்டியிட்ட அவர் 21 ஆயிரம் ஓட்டுகள் பெற்றார்.


இந்த தடவை பைசாலாத் நகருடன் அயோத்தி நகரும் சேர்க்கப்பட்டு மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. எனவே அதன் முதல் மேயராக திருநங்கையை தேர்வு செய்ய சமாஜ்வாடி பிந்துவை நிறுத்தியுள்ளது.

இதுபற்றி திருநங்கை குல்‌ஷன் பிந்து கூறுகையில், “எனக்கு ஏற்கனவே பைசலாபாத் அயோத்தி நகரங்களில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. நிச்சயம் நான் வெற்றி பெறு வேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

உத்தரபிரதேசத்தில் திருநங்கைகளுக்கு தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் டிக்கெட் கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளன. திருநங்கைகள் பாரபட்ச மின்றி செயல்படுவார்கள் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

2000-ம் ஆண்டு கோரக்பூர் மாநகராட்சி தேர்தலில் ஆஷாதேவி எனும் திருநங்கை போட்டியிட்டு வென்று மேயர் பதவியை வகித்தார்.

Tags:    

Similar News