செய்திகள்

கட்டாய ஆதார் இணைப்பை எதிர்த்து மேற்கு வங்க அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Published On 2017-10-28 00:24 GMT   |   Update On 2017-10-28 00:24 GMT
அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து மேற்கு வங்க அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு நலத்திட்டங்கள், சலுகைகளை பெற ஆதார் எண்ணை இணைப்பது  கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.  ஆதார் எண் இணைப்பதற்கு வருகிற டிசம்பர் 31-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த கால அவகாசத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை மேற்கு வங்க அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. குறிப்பாக செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். தனது இணைப்பை துண்டித்தாலும் தனது செல்போன் எண்ணுடன் ஆதாரை இணைக்கமாட்டேன் என அவர் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் இணைப்பதை எதிர்த்து மேற்கு வங்க அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுடன், மேற்கு வங்க அரசின் மனுவும் 30-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News