செய்திகள்

கேரளா: கடனுக்காக வீட்டை இழந்தவருக்கு லாட்டரியில் ரூ.60 லட்சம் பரிசு

Published On 2017-10-26 05:15 GMT   |   Update On 2017-10-26 05:15 GMT
திருவனந்தபுரம் அருகே கடனுக்காக வீட்டை இழந்த மீனவருக்கு லாட்டரியில் ரூ.60 லட்சம் பரிசு விழுந்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் அருகே காட்டாக்கடையை சேர்ந்தவர் பஷீர் (வயது 58). இவர், காட்டாக்கடை பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகளுக்கு கடன் வாங்கி திருமணம் செய்து வைத்திருந்தார். மேலும் கல்லூரி படிக்கும் இளைய மகளின் படிப்புக்காகவும், இவர் பலரிடம் கடன் வாங்கி இருந்தார்.

மேலும் தனது வீட்டை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கும் நிலைக்கும் பஷீர் தள்ளப்பட்டார்.

வங்கியில் வாங்கிய கடனை பஷீரால் திருப்பி கட்ட முடியவில்லை. மேலும் கடன் வாங்கியவர்களிடம் அவரால் குறிப்பிட்ட காலத்தில் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை.

இதனால் கடன்காரர்கள் அவரை நெருக்கினார்கள். மேலும் அவர் கடன் வாங்கிய வங்கியில் இருந்து ஊழியர்கள் அவரது வீட்டை ஜப்தி செய்யவும், நடவடிக்கை எடுத்தனர். அதன்படி வங்கி ஊழியர்கள் பஷீரின் வீட்டிற்கு சென்று ஜப்தி நடவடிக்கை தொடர்பான நோட்டீசை அவரது வீட்டு கதவில் ஒட்டினார்கள். 2 மணி நேரத்திற்குள் வீட்டை காலி செய்ய வேண்டுமென்றும் அவர்கள் கூறினார்கள்.

இதனால் பஷீர் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் உறைந்து போனார். அப்போது ஒரு லாட்டரி கடைக்காரர் பஷீரை தேடி வந்தார். அவரிடம் பஷீர் வாங்கிய கேரள அரசு லாட்டரியான ஸ்ரீசக்தியில் முதல் பரிசான ரூ.60 லட்சம் விழுந்துள்ள மகிழ்ச்சி தகவலை தெரிவித்தார்.

இதை தொடர்ந்து லாட்டரி பரிசு தொகை மூலம் தனது வீட்டை ஜப்தி நடவடிக்கையில் இருந்து மீட்க பஷீர் முயற்சி செய்து வருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, நான் எப்போதும் ஒன்று, இரண்டு லாட்டரி சீட்டுகளை வாங்க மாட்டேன். ஒரு கட்டாகதான் வாங்குவேன். இதுவரை எனக்கு பரிசு எதுவும் விழுந்ததில்லை. மிகவும் இக்கட்டான நேரத்தில் எனக்கு லாட்டரியில் பரிசு கிடைத்துள்ளதை மறக்க முடியாது என்றார்.
Tags:    

Similar News