search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா லாட்டரி"

    • ரூ.15,000 பறிமுதல்
    • அரவிந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் நகர பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் கம்பளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அங்கு அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த அரவிந்த் (வயது 28) என்பவரை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.15 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அரவிந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • பணத்தை பறித்துவிடுவார்களோ என்ற பயத்தால் காய்ச்சல் வந்தது.
    • போலீசார் அவரை ரகசியமாக தங்க வைத்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

    திருவனந்தபுரம் :

    மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிர்ஷூ ராபா. இவர் கடந்த சில ஆண்டுகளாக திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில் தங்கியிருந்து, கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிர்ஷூ ராபா தம்பானூரில் உள்ள ஒரு லாட்டரி கடையில் 5 சீட்டுகளை வாங்கி இருந்தார்.

    இந்தநிலையில் கடந்த புதன்கிழமை அந்த லாட்டரி குலுக்கலில் பிர்ஷூ ராபா வாங்கிய சீட்டுக்கு முதல்பரிசு ரூ.1 கோடி விழுந்தது. இதைக்கண்டு அவர் இன்ப அதிர்ச்சியடைந்தார்.

    இதுபற்றிய தகவல் சில நிமிடங்களில் அங்கிருந்த வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே காட்டுத்தீ போல் பரவியதால் பிர்ஷூ ராபாவை சந்திக்க குவியத்தொடங்கினர். பரிசு விழுந்த மகிழ்ச்சியில் இருந்த பிர்ஷூ ராபாவுக்கு சில மணிநேரத்தில் நம்மை கொலை செய்து விட்டு லாட்டரி சீட்டை பறித்துக்கொண்டு சென்று விடுவார்களோ என பயம் தொற்றிக்கொண்டது. இதனால் அவர் வேறு வழியின்றி திருவனந்தபுரம் தம்பானூர் போலீஸ்நிலையத்தில் தஞ்சம் அடைந்து விவரத்தை கூறினார்.

    இதைத்தொடர்ந்து, போலீசார் வங்கி அதிகாரிகளை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவர்களிடம் லாட்டரி சீட்டை ஒப்படைக்க வைத்தனர். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆனாலும், பயத்தில் அவருக்கு காய்ச்சலே வந்துவிட்டது. இதனால் மீண்டும் தம்பானூர் போலீசாரை தொடர்பு கொண்டு ஊருக்கு செல்லும் வரை தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவரை ரகசியமாக ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர். பணம் கிடைத்து சொந்த ஊருக்கு செல்லும் வரை அவரை தங்களது கண்காணிப்பில் வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக தம்பானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் கூறினார்.

    கேரள அரசு லாட்டரியில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசு விழுந்தால் அந்த பணம் கிடைப்பதில் சில சிக்கல்கள் உள்ளன.அதன்படி கேரள அரசு லாட்டரி வெளிமாநிலங்களில் விற்க அனுமதி இல்லாததால் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பரிசு விழுந்தால் அந்த சீட்டு எப்படி கிடைத்தது. கேரளாவுக்கு வந்தபோது வாங்கப்பட்டதா?. அப்படி என்றால் அது தொடர்பாக சில ஆவணங்களை அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும். அதை சரிபார்த்த பின்னரே அவர்களுக்கு பரிசு தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பரிசு விழுந்தால் சந்தோஷப்பட வேண்டும். அதைவிடுத்து அழுவது ஏன்? என்று போலீசார் கேட்டனர்.
    • பரிசு விழுந்த சீட்டை வங்கியில் டெபாசிட் செய்வது உள்பட வழிமுறைகளை தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த தம்பானூர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று வடமாநில தொழிலாளர்கள் சிலர் கும்பலாக ஓடிவந்தனர்.

    இதை கண்டு போலீஸ் நிலையத்தில் இருந்தவர்கள் மிரண்டு போனார்கள். மேலும் அவர்கள் போலீஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்து பாதுகாப்பு நடவடிக்கையிலும் இறங்கினர். இது எதையும் கண்டுகொள்ளாத தொழிலாளர்கள், போலீசார் அருகில் சென்று அவர்களின் கால்களில் விழுந்து கதற தொடங்கினர்.

    தாக்க வருகிறார்கள் என்று எண்ணிய நிலையில், தொழிலாளர்கள் போலீசார் காலில் விழுந்து அழுததை பார்த்ததும் போலீசார் பதறி போனார்கள். அவர்கள் வடமாநில தொழிலாளர்கள். அனைவருக்கும் ஆறுதல் கூறி எதற்காக அழுதீர்கள் என கேட்டனர்.

    அப்போது அவர்களில் ஒருவர் கையில் லாட்டரி சீட்டுடன் முன்னே வந்தார். அவர் போலீசாரை நோக்கி தனக்கு லாட்டரி குலுக்கலில் ரூ.1 கோடி பரிசு விழுந்திருப்பதாக தெரிவித்தார்.

    பரிசு விழுந்தால் சந்தோஷப்பட வேண்டும். அதைவிடுத்து அழுவது ஏன்? என்று போலீசார் கேட்டபோது, பரிசு விழுந்ததை அறிந்ததும், தன் நண்பர்கள் சிலரால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயமாக உள்ளது. எனவே நான் பரிசு பணத்தை வாங்கிவிட்டு ஊர் போய் சேரும்வரை எனக்கு பாதுகாப்பு தரவேண்டும், என்றார்.

    இதை கேட்டதும் போலீசார், வடமாநில தொழிலாளிக்கு உரிய பாதுகாப்பு தரப்படும் என உறுதி கூறினர். மேலும் பரிசு விழுந்த சீட்டை வங்கியில் டெபாசிட் செய்வது உள்பட வழிமுறைகளை தெரிவித்தனர். அதன்பின்பு பரிசு சீட்டுடன் வடமாநில தொழிலாளியும், போலீசாரும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    • லாட்டரி விற்பனையை தடுக்க வலியுறுத்தி லாட்டரி சீட்டுகளை பெட்ரோல் ஊற்றி எரிக்கப்போவதாக ராஜேஷ் குறிப்பிட்டு இருந்தார்.
    • ராஜேஷ் தான் கூறியபடி லாட்டரி கடைக்கு கையில் பாட்டிலுடன் சென்றார்.

    திருவனந்தபுரம்:

    லாட்டரி சீட்டு சிலருக்கு பரிசினை கொடுத்தாலும் பலருக்கு துன்பத்தையே கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பலரும் தெரிவித்தனர். குறிப்பாக ஏழை மக்கள் பலரும் லாட்டரி சீட்டு வாங்கி பணத்தை மட்டுமல்ல... உயிரையும் இழந்தனர்.

    இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் லாட்டரி சீட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

    இந்த லாட்டரி சீட்டுகள் திருட்டுத்தனமாக, தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு வருகிறது. அதனை போலீசார் சோதனை நடத்தி தடுத்து வருகிறார்கள். இந்த சூழலில் கேரளாவிலும் லாட்டரி சீட்டு விற்பனைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இதில் ஒருவர் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று லாட்டரி கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சீட்டுகளுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த செயலில் ஈடுபட்டவர் பெயர் ராஜேஷ். கேரள மாநிலம் திருப்புணித்துரா பகுதியைச் சேர்ந்த இவர், லாட்டரி சீட்டுகளால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், அதனை விற்கும் வியாபாரிகள் செல்வச் செழிப்புடன் இருப்பதாகவும் கூறி முகநூலில் வீடியோ வெளியிட்டார்.

    அந்த வீடியோவில், லாட்டரி விற்பனையை தடுக்க வலியுறுத்தி லாட்டரி சீட்டுகளை பெட்ரோல் ஊற்றி எரிக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    ஆனால் ராஜேஷ், தான் கூறியபடி அந்தப் பகுதியில் உள்ள லாட்டரி கடைக்கு கையில் பாட்டிலுடன் சென்றார். கடையின் முன்பு நின்று லாட்டரி சீட்டுக்கு எதிராக கோஷமிட்ட அவர், திடீரென தான் கையில் வைத்திருந்த பாட்டிலை திறந்து, விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த லாட்டரி சீட்டுகளின் மீது ஊற்றினார்.

    பின்னர் தீயை பற்ற வைக்க, லாட்டரி சீட்டுகள் குபீரென பற்றி எரிந்தது. அப்போது தான் அவர் பாட்டிலில் கொண்டு வந்து ஊற்றியது பெட்ரோல் என அனைவரும் அறிந்தனர். தீ அனைத்து சீட்டுகளுக்கும் பரவி எரிய, அங்கு லாட்டரி வாங்க வந்த பலரும் அலறியடித்து ஓடினர். கடையில் இருந்தவர்கள் தீயை அணைக்க போராடினர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. அனைத்து லாட்டரி சீட்டுகளும் எரிந்து நாசமாயின. இந்த சம்பவமும் முகநூலில் வைரலாக, கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • அதிர்ஷ்டசாலி பெயரை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமும் தெரிந்து கொள்ள முடியாது.
    • லாட்டரியில் பரிசு விழும் நபரின் பெயரை வெளியிட வேண்டும் என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் அரசே லாட்டரி விற்பனை செய்கிறது.

    கேரள லாட்டரியின் பூஜா பம்பர் குலுக்கல் சமீபத்தில் நடந்தது. இதில் முதல் பரிசான ரூ.10 கோடி திருச்சூரில் உள்ள லாட்டரி சீட்டு விற்பனை நிலையத்தில் இருந்து விற்பனையான சீட்டுக்கு கிடைத்தது.

    இதையடுத்து ரூ.10 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலியை தேடும் பணியில் கேரள லாட்டரி துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    பரிசு விழுந்த பல நாட்கள் ஆகியும் அதிர்ஷ்டசாலியின் பெயர் விபரங்கள் வெளியாகவில்லை. எனவே இதுபற்றிய தகவல்களை அறிந்து கொள்ள பல்வேறு தரப்பினரும் கேரள லாட்டரி துறை அதிகாரிகளையும், லாட்டரி சீட்டு விற்பனை நிலையத்தினரையும் தொடர்பு கொண்டு கேட்டனர்.

    அதற்கு அவர்கள் பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கூறிவிட்டார் என்றனர்.

    இதற்கான காரணம் என்ன? என்று கேட்டபோது, ஏற்கனவே ஓணம் பம்பர் குலுக்கலில் முதல் பரிசு பெற்ற ஆட்டோ டிரைவரிடம், பண உதவி கேட்டு பலரும் நச்சரிக்க தொடங்கினர்.

    இதனால் மனம் உடைந்த அவர், லாட்டரியில் எனக்கு பரிசு விழாமலேயே இருந்திருக்கலாம் என மனம் நொந்து கூறினார். இதுபோன்ற நிலை தனக்கும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இப்போது ரூ.10 கோடி பரிசு விழுந்த நபர் தனது அடையாளத்தை வெளியிட வேண்டாம் எனக்கூறியுள்ளார், என்றனர்.

    அதிர்ஷ்டசாலி பெயரை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமும் தெரிந்து கொள்ள முடியாது. லாட்டரியில் பரிசு விழும் நபரின் பெயரை வெளியிட வேண்டும் என்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வராது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 3 மாதங்களுக்கு ஒருமுறை உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணத்தை எண்ணி கருவூலத்தில் செலுத்துவது வழக்கம்.
    • 3 உண்டியல்களையும் திறந்து காணிக்கையை எண்ணும் பணியை தொடங்கினர்.

    திருப்பூர் :

    திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே மத்தியில் அமைந்துள்ளது வீரராகவப் பெருமாள் கோவில். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கோவிலில் உள்ள உண்டியலில் காணிக்கையை செலுத்தி செல்கின்றனர்.

    அதனை 3 மாதங்களுக்கு ஒரு இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் திறந்து உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணத்தை எண்ணி கருவூலத்தில் செலுத்துவது வழக்கம். அந்த வகையில் இன்று இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் 3 உண்டியல்களையும் திறந்து காணிக்கையை எண்ணும் பணியை தொடங்கினர். அப்போது உண்டியலில் வெளிநாட்டு கரன்சிகளும், கேரளா லாட்டரியும் இருந்தன. அதனை கண்டு அதிகாரிகள் வியப்பு அடைந்தனர். கண்காணிப்பு கேமரா உதவியுடன் உண்டியல் பணம் எண்ணும் பணியை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள், மற்றும் பணியாளர்கள், தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

    • கேரள அரசு முதல் பரிசு பெற்ற அனுப்புக்கு பரிசு பணத்தை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்த பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.
    • பணத்தை எவ்வாறு செலவளிப்பது, அதனை பாதுகாப்பாக முதலீடு செய்வது குறித்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் அரசே லாட்டரி விற்பனை செய்து வருகிறது.

    ஓணம் பண்டிகையையொட்டி ரூ.25 கோடி பரிசு தொகையுடன் கூடிய லாட்டரி சீட்டை விற்பனை செய்தது. இதன் குலுக்கல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடந்தது.

    இதில் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அனுப் என்ற ஆட்டோ டிரைவருக்கு முதல் பரிசான ரூ.25 கோடி கிடைத்தது. ஒரே நாளில் கோடீஸ்வரரான அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. அவரும், மனைவி மற்றும் குழந்தையுடன் சேர்ந்து பொதுமக்களின் பாராட்டை ஏற்றுக்கொண்டார்.

    பரிசு விழுந்த மறுநாள், அனுப்புக்கு வரிபிடித்தம் போக சுமார் ரூ.15 கோடியே 75 லட்சம் பணம் கிடைக்கும் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து அவர் பரிசு விழுந்த லாட்டரி சீட்டை வங்கியில் டெபாசிட் செய்தார்.

    பணம் கிடைத்த பின்னர் அதனை கொண்டு வீடு கட்டுவேன், ஏழைகளுக்கு உதவுவேன் எனக்கூறினார். அதன்பின்பு தான் அவருக்கு துயரம் தொடங்கியது. தினமும் அனுப்பிடம் உதவி கேட்டு ஏராளமானோர் அவரது வீட்டுக்கு வரத்தொடங்கினர்.

    ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் தாருங்கள் எனவும், தொண்டு நிறுவனங்களுக்கு உதவுங்கள் என்றும் அவரை தேடி பலரும் வரத்தொடங்கினர். அதுமட்டுமின்றி அனுப்பின் உறவினர்களும், வீட்டுக்கு வந்து எங்களுக்கும் கொஞ்சம் பணம் தா, என கேட்டனர்.

    இது மட்டுமின்றி கடைக்கு சென்றால் பொருளின் விலையை விட கூடுதலாகவும் சிலர் பணம் கேட்டனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் பணம் கேட்டு மிரட்டவும் செய்தனர்.

    பரிசு விழுந்த சில நாட்களிலேயே தனது நிலை ஒரேயடியாக மாறி போனதை கண்டு அனுப் திகைத்து போனார். வீட்டைவிட்டு வெளியே வரவே பயந்தார்.

    இதற்காக தனது வீட்டை பூட்டிவிட்டு சகோதரியின் வீட்டில் மறைந்து வாழ்கிறார். தலைமறைவு வாழ்க்கை நடத்தும் அனுப் இது பற்றி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    ரூ.25 கோடி பரிசு விழுந்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இப்போது அதை எண்ணி மிகவும் மனம் வருந்துகிறேன். பரிசு பணம் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை. அதற்குள் ஒவ்வொருவரும் என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்கள்.

    இதனால் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியவில்லை. என் குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவும் முடியாமல் தவிக்கிறேன். வெளியே சென்றால் என்னை அடையாளம் கண்டு கொண்டு ஒவ்வொருவரும் பணம் கேட்கிறார்கள். இதற்கு அந்த பரிசு விழாமலேயே இருந்திருக்கலாம்.

    லாட்டரியில் 3-வது அல்லது 4-வது பரிசு விழுந்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். இப்போது என் நிம்மதியே போச்சு. இவ்வளவு பெரிய தொகைக்கு வரி செலுத்துவது எப்படி? அதனை எவ்வாறு நிர்வகிப்பது? என்பது கூட எனக்கு தெரியாது.

    இதற்காக தொழில் வல்லுனர்களின் ஆலோசனையை கேட்டுள்ளேன். இப்போதைக்கு எனக்கு கிடைத்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய உள்ளேன். எனது முடிவால் யாரும் என்மீது கோபப்பட வேண்டாம்.

    இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

    இதற்கிடையே கேரள அரசு முதல் பரிசு பெற்ற அனுப்புக்கு பரிசு பணத்தை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்த பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது.

    பணத்தை எவ்வாறு செலவளிப்பது, அதனை பாதுகாப்பாக முதலீடு செய்வது குறித்து பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். இதனை கேரள நிதி மந்திரி தெரிவித்து உள்ளார்.

    • தன்னிடம் அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்கும் வாடிக்கையாளர், தன்னை நம்புவது போல தானும் அவர்களிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என கடைக்காரர் விரும்பினார்.
    • கடைக்காரர் நர்சு சந்தியாவை தொடர்பு கொண்டு அவருக்காக எடுத்து வைத்த சீட்டுக்கு முதல் பரிசு ரூ. 75 லட்சம் விழுந்திருப்பதை கூறினார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் அரசே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளது.

    கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிறுசிறு கடைகளிலும் இச்சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதுண்டு.

    இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியில் உள்ள ஒரு லாட்டரி கடையில் அதே பகுதியை சேர்ந்த நர்சு சந்தியா என்பவர் லாட்டரி சீட்டு வாங்குவார்.

    கடைக்காரர் அவருக்காக ஒரு சீட்டை எடுத்து அதனை தனியாக ஒரு கவரில் போட்டு வைப்பார். பரிசு குலுக்கல் நடந்த பின்னர், அந்த சீட்டுக்கு பரிசு விழுந்திருக்கிறதா? என்பதை பார்த்து விட்டு அதனை நர்சு சந்தியாவிடம் தெரிவிப்பார்.

    கடைக்காரர் எடுத்து வைக்கும் சீட்டை ஒருபோதும் நர்சு சந்தியா வாங்கி பார்ப்பதில்லை. கடைக்காரர் கூறுவதை மட்டும் கேட்டுக்கொள்வார். பல மாதங்களாக இதுபோல அவர் லாட்டரி சீட்டு வாங்கி வந்தார்.

    இந்த நிலையில் சமீபத்தில் ஸ்திரி சக்தி லாட்டரி விற்பனை நடந்தது. இதற்கான சீட்டு ஒன்றையும் நர்சு சந்தியாவுக்காக கடைக்காரர் எடுத்து வைத்திருந்தார்.

    2 நாட்களுக்கு முன்பு குலுக்கல் முடிவுகள் வெளியானது. இதில் நர்சு சந்தியாவுக்காக கடைக்காரர் எடுத்து வைத்திருந்த சீட்டுக்கு முதல் பரிசான ரூ.75 லட்சம் விழுந்திருந்தது.

    நர்சு சந்தியாவுக்கு கடைக்காரர் எடுத்து வைத்த சீட்டின் எண்ணோ அல்லது அதன் விபரமோ தெரியாது. அந்த சீட்டுக்குதான் முதல் பரிசு விழுந்த தகவலும் தெரியாது.

    ஆனாலும் தன்னிடம் அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்கும் வாடிக்கையாளர், தன்னை நம்புவது போல தானும் அவர்களிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என கடைக்காரர் விரும்பினார். எனவே அவர் நர்சு சந்தியாவை தொடர்பு கொண்டு அவருக்காக எடுத்து வைத்த சீட்டுக்கு முதல் பரிசு ரூ. 75 லட்சம் விழுந்திருப்பதை கூறினார்.

    இதனை கேட்டு வியப்பில் மூழ்கிய நர்சு சந்தியா, லாட்டரி விற்பனையாளரின் நேர்மையை பாராட்டினார். இது பற்றி அவர் கூறும்போது, எனக்காக கடைக்காரர் எடுத்து வைத்த சீட்டின் எண் எனக்கு தெரியாது. அவர் நினைத்திருந்தால் சீட்டை மாற்றி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவரது நேர்மை என்னை ஆச்சரியப்படுத்தியது, என்றார்.

    இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து லாட்டரி விற்பனையாளரின் நேர்மையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

    • மழைக்கால பம்பர் லாட்டரி குலுக்கல் 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதன் முதல் பரிசு ரூ.10 கோடி ஆகும்.
    • இந்த அதிர்ஷ்ட சீட்டு எர்ணாகுளத்தில் விற்பனை ஆகியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் அரசே லாட்டரி குலுக்கல் நடத்தி வருகிறது.

    அரசின் பெரும்பாலான வருவாய் லாட்டரி விற்பனை மூலமே கிடைக்கிறது. இதற்காக ஓணம், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களிலும் மழைக்கால பம்பர் லாட்டரி சீட்டுகளை அரசு விற்பனை செய்து வருகிறது.

    இந்த ஆண்டு ஓணம் பம்பர் குலுக்கல் முதல் பரிசு ரூ. 25 கோடி என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விற்பனை தற்போது தொடங்கி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மழைக்கால பம்பர் லாட்டரி குலுக்கல் 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதன் முதல் பரிசு ரூ.10 கோடி ஆகும். இந்த அதிர்ஷ்ட சீட்டு எர்ணாகுளத்தில் விற்பனை ஆகியுள்ளது.

    இரண்டாம் பரிசு ரூ.50 லட்சம் ஆகும். இந்த சீட்டுகளை வாங்கிய அதிர்ஷ்டசாலி யார்? என்பது இதுவரை தெரியவில்லை. கடந்த 2 நாட்களாக அதிர்ஷ்டசாலியை லாட்டரி விற்பனை துறை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.

    ×