search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நர்சுக்காக எடுத்து வைத்த லாட்டரி சீட்டுக்கு ரூ.75 லட்சம் முதல் பரிசு- விற்பனையாளருக்கு குவியும் பாராட்டு
    X

    நர்சுக்காக எடுத்து வைத்த லாட்டரி சீட்டுக்கு ரூ.75 லட்சம் முதல் பரிசு- விற்பனையாளருக்கு குவியும் பாராட்டு

    • தன்னிடம் அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்கும் வாடிக்கையாளர், தன்னை நம்புவது போல தானும் அவர்களிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என கடைக்காரர் விரும்பினார்.
    • கடைக்காரர் நர்சு சந்தியாவை தொடர்பு கொண்டு அவருக்காக எடுத்து வைத்த சீட்டுக்கு முதல் பரிசு ரூ. 75 லட்சம் விழுந்திருப்பதை கூறினார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் அரசே லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டுள்ளது.

    கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிறுசிறு கடைகளிலும் இச்சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதுண்டு.

    இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியில் உள்ள ஒரு லாட்டரி கடையில் அதே பகுதியை சேர்ந்த நர்சு சந்தியா என்பவர் லாட்டரி சீட்டு வாங்குவார்.

    கடைக்காரர் அவருக்காக ஒரு சீட்டை எடுத்து அதனை தனியாக ஒரு கவரில் போட்டு வைப்பார். பரிசு குலுக்கல் நடந்த பின்னர், அந்த சீட்டுக்கு பரிசு விழுந்திருக்கிறதா? என்பதை பார்த்து விட்டு அதனை நர்சு சந்தியாவிடம் தெரிவிப்பார்.

    கடைக்காரர் எடுத்து வைக்கும் சீட்டை ஒருபோதும் நர்சு சந்தியா வாங்கி பார்ப்பதில்லை. கடைக்காரர் கூறுவதை மட்டும் கேட்டுக்கொள்வார். பல மாதங்களாக இதுபோல அவர் லாட்டரி சீட்டு வாங்கி வந்தார்.

    இந்த நிலையில் சமீபத்தில் ஸ்திரி சக்தி லாட்டரி விற்பனை நடந்தது. இதற்கான சீட்டு ஒன்றையும் நர்சு சந்தியாவுக்காக கடைக்காரர் எடுத்து வைத்திருந்தார்.

    2 நாட்களுக்கு முன்பு குலுக்கல் முடிவுகள் வெளியானது. இதில் நர்சு சந்தியாவுக்காக கடைக்காரர் எடுத்து வைத்திருந்த சீட்டுக்கு முதல் பரிசான ரூ.75 லட்சம் விழுந்திருந்தது.

    நர்சு சந்தியாவுக்கு கடைக்காரர் எடுத்து வைத்த சீட்டின் எண்ணோ அல்லது அதன் விபரமோ தெரியாது. அந்த சீட்டுக்குதான் முதல் பரிசு விழுந்த தகவலும் தெரியாது.

    ஆனாலும் தன்னிடம் அடிக்கடி லாட்டரி சீட்டு வாங்கும் வாடிக்கையாளர், தன்னை நம்புவது போல தானும் அவர்களிடம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என கடைக்காரர் விரும்பினார். எனவே அவர் நர்சு சந்தியாவை தொடர்பு கொண்டு அவருக்காக எடுத்து வைத்த சீட்டுக்கு முதல் பரிசு ரூ. 75 லட்சம் விழுந்திருப்பதை கூறினார்.

    இதனை கேட்டு வியப்பில் மூழ்கிய நர்சு சந்தியா, லாட்டரி விற்பனையாளரின் நேர்மையை பாராட்டினார். இது பற்றி அவர் கூறும்போது, எனக்காக கடைக்காரர் எடுத்து வைத்த சீட்டின் எண் எனக்கு தெரியாது. அவர் நினைத்திருந்தால் சீட்டை மாற்றி இருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவரது நேர்மை என்னை ஆச்சரியப்படுத்தியது, என்றார்.

    இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து லாட்டரி விற்பனையாளரின் நேர்மையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

    Next Story
    ×