செய்திகள்

கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மவுனம், சம்மதம் ஆகாது: டெல்லி ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

Published On 2017-10-23 03:09 GMT   |   Update On 2017-10-23 03:23 GMT
கற்பழிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் மவுனமாக இருந்தார் என்பதை மட்டுமே வைத்து, உறவு கொள்வதற்கு சம்மதம் என எடுத்து கொள்ள கூடாது என டெல்லி ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
புதுடெல்லி:

டெல்லியை அடுத்த நொய்டாவில் 2011-ம் ஆண்டு, 19 வயது பெண் ஒருவர் 28 வயதான முன்னா என்பவரால் கற்பழிக்கப்பட்டார். இது தொடர்பான கற்பழிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றம், முன்னா குற்றவாளி என கண்டு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டை நீதிபதி சங்கீதா திங்கரா சேகல் விசாரித்தார்.

குற்றவாளி முன்னா சார்பில் வாதிடுகையில், “சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சம்மதத்தின்பேரில்தான் குற்றம் சாட்டப்பட்ட நபர் செக்ஸ் உறவு வைத்து கொண்டார். அந்தப் பெண்ணின் மவுனமே சம்மதத்துக்கு ஆதாரம்” என கூறப்பட்டது.

ஆனால் இந்த வாதத்தை நீதிபதி நிராகரித்தார். “பாதிக்கப்பட்ட பெண் மவுனமாக இருந்தார் என்பதை மட்டுமே வைத்து, அதை சம்மதத்துடன் மேற்கொள்ளப்பட்ட செக்ஸ் உறவு என கூறி, அதை ஆதாரமாக கொள்ள முடியாது. ஏனென்றால் குற்றவாளி தன்னை மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் கூறி உள்ளார். எனவே சம்மந்தப்பட்ட பெண்ணின் சம்மதம் பெறாமல் செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது கற்பழிப்புதான்” என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.

மேலும், குற்றவாளி முன்னாவுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதிசெய்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். 
Tags:    

Similar News