செய்திகள்

தாஜ்மஹாலுக்கு செல்லும் யோகி ஆதித்யநாத்: 500 பேருடன் தூய்மை பணிகளை மேற்கொள்கிறார்

Published On 2017-10-22 07:39 GMT   |   Update On 2017-10-22 07:39 GMT
தேசிய அரசியலில் சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தாஜ்மஹாலுக்கு வரும் 26-ம் தேதி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முதன் முறையாக செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சுற்றுலா தளங்கள் பட்டியலில் இருந்து உலக அதிசயமான தாஜ்மஹால் நீக்கப்பட்டது. இதனையடுத்து, தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது எனவும் அது அவமானத்தின் சின்னம் எனவும் அம்மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது போதாதென்று, சிவன் கோவிலை இடித்து தான் தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளதாக பா.ஜ.க எம்.பி வினய் கட்டியார் கொளுத்திப்போட தாஜ்மஹால் தேசிய அளவில் தொடர்ந்து பேசு பொருளாக ஆனது. இதற்கு பதிலடி தரும் விதமாக, டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட பல கட்டிடங்கள் மொகலாய ஆட்சியில் கட்டப்பட்டதே, அதையும் இடிக்கலாம் என பலர் கருத்து கூறினர்.

இந்நிலையில், மேற்கண்ட சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தாஜ்மஹாலுக்கு செல்ல இருக்கிறார். வரும் 26-ம் தேதி அங்கு செல்லும் அவர் தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் 500 தன்னார்வலர்களுடன் தூய்மைப்பணியை மேற்கொள்ள இருக்கிறார். 
Tags:    

Similar News