செய்திகள்

குஜராத்: ஹர்திக் படேலின் முக்கிய கூட்டாளிகள் பா.ஜ.க.வில் இணைந்தனர்

Published On 2017-10-21 19:55 GMT   |   Update On 2017-10-21 19:55 GMT
குஜராத் மாநிலத்தில் இட ஒதுக்கீடு கேட்டு போராடி வரும் ஹர்திக் படேலின் முக்கிய கூட்டாளிகள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் இட ஒதுக்கீடு கேட்டு போராடி வரும் ஹர்திக் படேலின் முக்கிய கூட்டாளிகள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் வசித்து வரும் படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக்கோரி ஹர்திக் படேல் போராட்டம் நடத்தி வருகிறார். இவர் நடத்தும் பேரணிகள் மற்றும் போராட்டங்களில் பிரமாண்ட கூட்டம் கூடியது. இந்த போராட்டத்தின் போது தேசிய கொடியை அவமதித்ததாக ஹர்திக் படேல் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இதற்கிடையே, குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பதால், இவர்மீது
தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்கை மாநில அரசு வாபஸ் பெற்றது.

இந்நிலையில், ஹர்திக் படேலின் ஆதரவாளர்களாக கருதப்படும் வருண் படேல் மற்றும் ரேஷ்மா படேல் ஆகியோர் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் நேற்று இணைந்துள்ளனர். அதன்பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

படேல் சமூகத்தினரை காங்கிரஸ் கட்சியினர் வெறும் வாக்கு வங்கிகளாக மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்டாக செயல்பட்டு வருகிறார். எனவே தான் நாங்கள் பாஜகவில் இணைந்து விட்டோம். பா.ஜ.க.வினர் எங்களது கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து ஹர்திக் படேல் டுவிட்டரில் கூறுகையில், மக்கள் என்னுடன் உள்ளனர். எனவே அவர்களுக்கான எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News