செய்திகள்

மோடி அரசில் இருப்பவர்கள் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை மோசமாக்கி விட்டனர்: யஷ்வந்த் சின்கா குற்றச்சாட்டு

Published On 2017-10-17 07:47 GMT   |   Update On 2017-10-17 07:47 GMT
பிரதமர் மோடி தலைமையின் கீழ் இருக்கும் அரசியல் தலைவர்கள் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை மோசமாக்கி விட்டனர் என்று பாரதிய ஜனதாவை யஷ்வந்த் சின்கா மீண்டும் விமர்சித்து உள்ளார்.
மும்பை:

வாஜ்பாய் மந்திரி சபையில் நிதிமந்திரியாக இருந்தவர் யஷ்வந்த் சின்கா. பாரதிய ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான அவர் ஏற்கனவே பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் பொருளாதாரம் வீழ்ச்சி ஏற்பட்டதாக மோடி அரசை விமர்சித்து இருந்தார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அரசை யஷ்வந்த் சின்கா மீண்டும் கடுமையாக தாக்கியுள்ளார். மராட்டிய மாநிலம் அகோலா நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதுதொடர்பாக பேசியதாவது:-

பொருளாதார நெருக்கடியை நாம் ஏற்கனவே சந்தித்து வருகிறோம். அப்படி இருக்கும் போது எண்ணிக்கை மற்றும் புள்ளி விவரங்களில் என்ன இருக்கிறது? எண்களால் ஒரு வி‌ஷயத்தை நிரூபிக்க முடியும். அதே எண்களால் மறு தரப்பின் வாதத்தையும் நிரூபிக்க முடியும்.

மத்திய அரசின் தலைவர் (பிரதமர் மோடி) சமீபத்தில் தனது ஒரு மணிநேர உரையில் இந்தியாவின் வளர்ச்சியை காட்டுவதற்காக பல்வேறு எண்களை குறிப்பிட்டார். ஏராளமான மோட்டார் சைக்கிள்களும், கார்களும் விற்பனை செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

அதற்கு இந்தியா முன்னேறுகிறது என்று அர்த்தமா? விற்பனை இருக்கிறது. ஆனால் உற்பத்தி நடக்கிறதா? என்பதுதான் கேள்வி.

இந்த நிகழ்ச்சியில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து பேசுவதை நான் தவிர்கிறேன். ஏனெனில் தோற்றுப்போன ஒரு வி‌ஷயம் குறித்து என்ன பேசுவது? என்பதான் காரணம்.

ஜி.எஸ்.டி. வரிதிப்பானது சிறந்த மற்றும் எளிய வரிவிதிப்பு என்று மத்திய அரசு கூறுகிறது. இந்த வரிவிதிப்பு சிறந்ததாகவும், எளிதாகவும் இருந்து இருக்க முடியும். ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் அதை மோசமானதாகவும், சிக்கல் நிறைந்ததாகவும் ஆக்கிவிட்டனர்.

ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் அமலாக்கத்தில் உள்ள முரண்பாடுகளை களைவது அரசின் கடமையாகும்.

அரசின் மீது மக்கள் சக்தியின் கண்காணிப்பு இருக்க வேண்டும் என்பது சோசலிச தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கருத்தாகும். அதையே நான் வலியுறுத்துகிறேன். மக்கள் சக்திதான் மத்திய அரசை கட்டுப்படுத்த வேண்டும். அகோலா நகரில் இருந்து மக்கள் சக்திக்கான முன் முயற்சிகளை தொடங்குவோம்.

பொருளாதார நிலைமை குறித்து மத்திய அரசை விமர்சித்து சமீபத்தில் நான் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். இந்த வி‌ஷயத்தில் மக்கள் நினைப்பதையே நானும் கூறி இருக்கிறேன் என்று கருதுகிறார்கள்.

இவ்வாறு யஷ்வந்த் சின்கா பேசினார்.
Tags:    

Similar News