செய்திகள்

கேரளாவில் மீண்டும் கனமழை: மலையோர கிராமங்கள் தீவானது

Published On 2017-10-13 05:00 GMT   |   Update On 2017-10-13 05:00 GMT
கேரளாவில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் மலையோர கிராமங்கள் தீவானது. ஆதிவாசி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கன மழையாக பெய்தது. இதனால் மாநிலத்தில் நிலவி வந்த வறட்சி நீங்கி நீர்நிலைகளும் நிரம்பின.

கேரளாவில் சற்று ஓய்ந்திருந்த மழை தற்போது கடந்த 4 நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. மாநில தலைநகரான திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு, வயநாடு, மலப்புரம், எர்ணாகுளம் போன்ற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் திருவனந்தபுரம் நகரில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தம்பானூர் பஸ் நிலையத்திற்குள் மழை நீர் புகுந்ததால் அது குளம்போல மாறியது. இதனால் பஸ்கள் உள்ளே செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பயணிகளை பஸ் நிலையத்திற்கு வெளியே இறக்கிவிட்டு செல்லும் நிலை உருவானது.

கேரளாவின் மலையோர பகுதிகளான விதுரா, காட்டாக்கடை போன்ற இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள ஆதிவாசி கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்தபடி ஓடுகிறது.

இதனால் அவர்களது கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தீவு போல மாறிவிட்டது. இதைதொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அந்த ஆதிவாசி மக்களை படகுகள் மூலம் மீட்டு வெள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

இதேபோல கேரளாவின் கடலோர பகுதிகளான சிறையின்கீழ், விழிஞ்சம், கோவளம் போன்ற இடங்களில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. சிறையின்கீழ் பகுதியில் 4 விசைப்படகுகளை கடலுக்குள் அலைகள் இழுத்துச் சென்றன. ஒரு படகு உடைந்து நொறுங்கியது. விழிஞ்சம், கோவளம் பகுதிகளில் 9 படகுகள் கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டது. இங்குள்ள 9 மீனவர் கிராமங்களில் கடல் நீர் புகுந்ததால் அங்குள்ள மீனவ மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்று தங்கி உள்ளனர்.

மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுத்துறைகளும் தயார் நிலையில் இருக்கும்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த மழை மேலும் 5 நாட்களுக்கு கனமழையாக நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

Tags:    

Similar News