செய்திகள்

குஜராத்தில் பா.ஜ.க. கவுன்சிலரை கட்டி வைத்து உதைத்த மக்கள் - வைரலாக பரவும் வீடியோ

Published On 2017-10-04 03:54 GMT   |   Update On 2017-10-04 03:54 GMT
குஜராத் மாநிலம் வதோதரா பகுதியின் பா.ஜ.க. கவுன்சிலரை அப்பகுதி மக்கள் கட்டி வைத்து உதைப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தின் முன்னால் அனுமதியின்றி சில குடிசைகள் கட்டப்பட்டு அதில் சிலர் வசித்து வந்தனர். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் அந்த குடிசைகளை நேற்று இடித்து தள்ளினர்.

மாநகராட்சியின் இந்த முடிவுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பகுதியில் திரண்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அங்கிருந்த பா.ஜ.க. கவுன்சிலர் ஹஸ்முக் படேலிடம் வாக்குவாதம் செய்தனர். முன் அறிவிப்பு செய்யாமல் எப்படி நடவடிக்கை எடுக்கலாம்? என கேட்டு தகராறு செய்தனர்.

குடிசைகளை இடிப்பது குறித்து தனக்கும் எந்த நோட்டீசும் வரவில்லை என பா.ஜ.க. கவுன்சிலர் கூறியதை அவர்கள் ஏற்கவில்லை. ஆத்திரமடைந்த அவர்கள் ஹஸ்முக் படேலை தாக்கத் தொடங்கினர். அதன்பின்னர் அவரை அருகிலுள்ள மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் அடங்கிய வீடியோ அப்பகுதியில் உள்ள சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இதைதொடர்ந்து, பா.ஜ.க. கவுன்சிலரை தாக்கியது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக 30க்கு மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. கவுன்சிலரை மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் உதைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News