செய்திகள்

ஒடிசாவில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்புக்கு சிடி ஸ்கேன் எடுத்த டாக்டர்கள்

Published On 2017-09-26 18:16 GMT   |   Update On 2017-09-26 18:16 GMT
ஒடிசாவில் வனப்பகுதியில் அடிப்பட்ட நிலையில் இருந்த 8 அடி நீளமுள்ள மலைப்பாம்புக்கு சிடி ஸ்கேன் எடுத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புவனேஷ்வர்:

ஒடிசா மாநிலம் கியோன்ஜார் மாவட்டத்தில் உள்ள புவனேஸ்வரில் வனப்பகுதியில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று அடிப்பட்டு கிடந்துள்ளது. அதனை வனத்துறை அதிகாரிகள் மீட்டு, ஒடிசாவின் ஸ்னேக் ஹெல்ப் லைன் அமைப்பின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அனந்தபூர் வனத்துறை அதிகாரி ஒருவர் கால்நடை மருத்துவ கல்லூரிக்கு மலைப்பாம்பை எடுத்து வந்தார். முதலில் பாம்பிற்கு எந்த இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது என்று கண்டறிய எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. ஆனால் அதில் காயங்கள் சரியாக தெரியவில்லை. அதனையடுத்து அதன் காயங்களை தெளிவாக அறிந்து கொள்ள கால்நடை மருத்துவர்கள் அதற்கு சிடி ஸ்கேன் செய்ய முடிவு செய்தனர்.



இந்தநிலையில் பாம்பின் உடலில் மருத்துவ டேப்பை பயன்படுத்தி அதன் உடலில் ஒட்டினர். அதனை தொடர்ந்து அதற்கு ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதன் உடல் முழுவதிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருப்பதை அந்த ஸ்கேன் மூலம் தெரியவந்தது. இது குறித்து சர்வதேச கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையை பெற்ற பிறகு பாம்பிற்கு சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவிலேயே அடிப்பட்ட பாம்பிற்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.
Tags:    

Similar News