செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு இந்திய படைகளை அனுப்பும் எண்ணம் இல்லை: நிர்மலா சீதாராமன்

Published On 2017-09-26 10:04 GMT   |   Update On 2017-09-26 10:04 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு இந்திய படைகளை அனுப்பும் எண்ணம் இல்லை என அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜிம் மேட்டீஸ் உடனான சந்திப்பிற்கு பின்னர் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜிம் மேட்டீஸ் அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வந்தார். தலைநகர் டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை இந்திய உயரதிகாரிகள் வரவேற்றனர். இதனையடுத்து, நார்த் ப்ளாக்கில் மேட்டீஸை பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

முன்னதாக டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் வீரமரணம் அடைந்த முன்னாள் வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை தொடங்கியது.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு இருவரும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன்,  இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு பலமாக உள்ளது. ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிகாக  அனைத்து உதவிகளும் இந்தியா மேற்கொள்ளும். இருப்பினும், இந்திய படைகளை அங்கு அனுப்பும் எண்ணம் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவில் அமெரிக்காவின் உற்ற நட்பு நாடாக இந்தியா உள்ளதாகவும், தீவிரவாதம் தொடர்பாக அமெரிக்கா எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் இந்தியா ஆதரவு அளித்து வருவதாகவும் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சகம்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News