செய்திகள்

முடக்கப்பட்ட நிறுவனத்தின் இயக்குனர் பொறுப்பில் இருந்து அருணாச்சல பிரதேச முதல்வர் தகுதிநீக்கம்

Published On 2017-09-23 06:46 GMT   |   Update On 2017-09-23 06:46 GMT
மத்திய அரசால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட போலி நிறுவனங்களின் இயக்குனர்களில் அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா காண்டுவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
புதுடெல்லி:

கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்ய அவகாசமும் அளிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில், போலி நிறுவனங்களின் கணக்குகளில் பல கோடி டெபாசிட் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 2 லட்சத்துக்கும் அதிகமான போலி நிறுவனங்களின் பதிவுகளை மத்திய அரசு ரத்து செய்தது. இவற்றில் பெரும்பாலானவை நீண்டகாலமாக செயல்பாட்டில் இல்லாத நிறுவனங்கள் ஆகும்.

அந்த நிறுவனங்களின் 1.06 லட்சம் இயக்குனர்களை மத்திய கம்பெனி விவகாரங்கள் அமைச்சகம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதில், அருணாச்சல பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் பீமா காண்டு மற்றும் அசாமில் பா.ஜ.க. தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மந்தி நவ குமார் டோலே ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

ரிக்செல் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் நிறுவனத்தின் மூன்று இயக்குனர்களில் பீமா காண்டுவும் ஒருவர். இந்த நிறுவனத்தின் முகவரியை அவர் தனது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த நிறுவனம் பீமா காண்டுவின் தந்தை டோர்ஜி காண்டு முதலமைச்சராக இருந்தபோது 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ம்தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. 1.2 லட்சம் மூலதனத்துடன் தொடங்கப்பட்ட ரிக்செல் ஹோட்டல் நிர்வாகத்தின் வணிக நடவடிக்கைகள் குறித்த விவரங்கள்  வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

இதேபோல் அசாம் மாநில விளையாட்டுத்துறை இணை மந்திரி டோலே அபுதானி வீல்ஸ் இந்தியா என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குனராக இருந்தார். அந்த நிறுவனமும் போலி நிறுவனமாக கண்டறியப்பட்டு டோலே தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News