செய்திகள்

கர்நாடகாவில் பா.ஜ.க. பரிவர்த்தனை பேரணி - பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்பு

Published On 2017-09-19 13:26 GMT   |   Update On 2017-09-19 13:26 GMT
கர்நாடக மாநிலத்தில் நவம்பர் முதல் தேதியில் இருந்து 70 நாட்களுக்கு நடைபெறும் பா.ஜ.க. பரிவர்த்தனை பேரணியை பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.
பெங்களூரு:

கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா பெங்களூரு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். காங்கிரஸ் ஆட்சியின் நிர்வாக சீர்கேடு மற்றும் ஊழல்களை முன்வைத்தும், மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் நாடு அடைந்துள்ள வளர்ச்சியை விளக்கும் வகையில் கர்நாடக மாநிலத்தில் நவம்பர் முதல் தேதியில் இருந்து 70 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் பா.ஜ.க. பரிவர்த்தனை பேரணி நடைபெறும்.

இந்த பேரணியை நவம்பர் முதல் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா ஆகியோர் துவக்கி வைக்கின்றனர் என தெரிவித்த எடியூரப்பா, வரும் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் 150 இடங்களில் பா.ஜ.க வெற்றிபெறும் வகையில் இந்த பரிவர்த்தனை பேரணி அமையும்.

மத்தியில் ஆட்சிக்கு வந்த மூன்றே ஆண்டுகளில் இந்த நாட்டை மாற்றியமைத்த பிரதமர் மோடியின் சாதனைகளை முன்வைத்து இந்த சட்டசபை தேர்தலை நாங்கள் சந்திப்போம். ஆனால், எந்தவொரு சாதனையையும் செய்யாமல், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற தகுதிகூட இல்லாத காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அடுத்த பிரதமர் நான்தான் என்று பகல் கனவு காண்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில் பல துறைகளில் மந்திரிகள் செய்துள்ள ஊழல் பட்டியலை வரும் 24-ம் தேதி பா.ஜ.க., வெளியிடும் எனவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News